Published : 27 Jun 2023 12:50 AM
Last Updated : 27 Jun 2023 12:50 AM
அரூர்: தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் ஒட்டுப்பட்டியில் அமைந்துள்ள பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியால் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பொ மல்லாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பழைய ஒட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளது. இதன் அருகில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. இப்பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பழைய ஒட்டுப்பட்டி, புது ஒட்டுப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த சுமார் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
தற்போது இந்த குடிநீர் தொட்டியானது பழுதடைந்து காணப்படுகின்றது. தொட்டியினை தாங்கும் துாண்களில் இரண்டிலும், தொட்டியின் அடிப்பகுதியிலும் விரிசல் ஏற்பட்டு பெருமளவு சேதமுற்று காணப்படுகின்றது. சேதமுற்றுள்ள தொட்டியின் மூலமாகவே இதுவரை குடிநீர் ஏற்றப்பட்டு அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், வலுவில்லாத சூழலில் காணப்படும் இந்த தொட்டியானது எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் அபாயத்திலேயே உள்ளது. அவ்வாறு ஏதேனும் விபரீதம் நடந்தால் அருகில் உள்ள பள்ளிகட்டிடமும் அதில் பயிலும் மாணவர்களுக்கும் பெரும் ஆபத்தை உண்டாக்கிடும் வாய்ப்புள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பலமுறை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கல்வித்துறைக்கு தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மெத்தனப் போக்கே நிலவி வருகின்றது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கேசவன் கூறுகையில், "கட்டிமுடிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலானதால் மேல்நிலைத் தொட்டி மிகவும் பழுதடைந்துள்ளது. இருப்பினும் குடிநீர் தேவைக்காக இன்னும் பயன்பாட்டில் உள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பழுதடைந்துள்ள தொட்டியை அப்புறப்படுத்தி புதிதாக 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்துத் தர பேருராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT