Published : 26 Jun 2023 11:00 PM
Last Updated : 26 Jun 2023 11:00 PM
புதுச்சேரி: முதல்வர் இருக்கையில் ஏன் அமர்ந்திருக்கிறோம் என்று எண்ணுகிறேன் என்று பேரவைத்தலைவர், திமுக எம்எல்ஏக்கள் முன்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனையுடன் குறிப்பிட்டார்.
கரோனா தடுப்பு பணிக்கு கடந்த 9.9.2020ல் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர், ஏஎன்எம் ஆகியோர் ஒப்பந்த அடிப்படையிலேயே பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. அப்படியாக இதுவரை மூன்று முறைக்கு மேல் அவர்களுக்கு ஒப்பந்தம் நீட்டித்து தரப்பட்டுள்ளது. முன்னதாக அந்த செவிலியர்களுக்கு வாய்ப்பிருந்தால் பணி நிரந்தரம் செய்ய அரசு ஆலோசிப்பதாக தெரிவித்திருந்தது. இந்தநிலையில் அடுத்த மாதம் புதிய செவிலியர்களை தேர்வு செய்வதற்கு போட்டித் தேர்வை நடத்துவதற்கான பணிகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகின்றது.
இதை எதிர்த்து செவிலியர்கள், பெருந்தொற்று காலத்தில் தற்காலிகமாக அரசு மருத்துவமனைகளில் பணியில் சேர்ந்து பணியாற்றி வரும் தங்களை, நியமன விதிகளை தளர்த்தி நேரடியாக நிரந்தர பணியாளர்களாக ஆக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அதற்கான பணிகள் எதுவும் நடக்காததால் சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமியை சந்திக்க நூற்றுக்கணக்கான செவிலியர்கள் புதுச்சேரி சட்டமன்ற வாயில் முன்பு இன்று திரண்டனர். அவர்கள் அனைவரையும் உள்ளே அனுமதிக்க மறுத்து பேரவைக்காவலர்கள் வாயிற்கதவை மூடினார்கள்.
இதனைத்தொடர்ந்து செவிலியர்கள் சட்டப்பேரவை வாயில் முன்பு முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் சிவா மற்றும் திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், நாகதியாகராஜன், சம்பத், செந்தில்குமார் உள்ளிட்டோர் அங்கிருந்த செவிலியர்களை அழைத்து பேசி சில செவிலியர்களை மட்டும் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து சென்றனர்.
அதேநேரத்தில், பேரவைத்தலைவர் செல்வம், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் அங்கு வந்தனர். அப்போது அவர்களிடம் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "முன்பு இருந்த நிர்வாகம வேறு, தற்போது இருப்பது வேறு. உங்களுக்கு வேலையில்லை, எடுத்து விடுங்கள் என்று சொல்லியும், 3 மாதங்களுக்கு ஒரு முறை ஒப்பந்தம் நீட்டித்து தருகிறேன். இங்கு 18 ஆண்டுகளாக பணி புரிந்தோருக்கே ஏதும் செய்ய முடியவில்லை. உங்களிடம் சொல்வதற்கு தயக்கமாகதான் உள்ளது.
இந்த முதல்வர் இருக்கையில் ஏன் உட்கார்ந்திருக்கிறோம் என்று எண்ணுகிறேன். அப்படியே எழுந்து பின்பக்கமாக வெளியே சென்று விடலாம் போல் உள்ளது. முதல்வர் சொன்னால் முன்பெல்லாம் நடைபெறும். இப்போது அதுபோல் செய்ய முடியாது. விழாவுக்கு சென்றாலே, கல்வெட்டில் பெயர் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியுள்ளது.
புதிதாக ஆட்கள் எடுத்தால், கரோனா காலத்தில் நீங்கள் பணிபுரிந்தற்காக வெயிட்டேஜ் செய்கிறோம். அதுதான் செய்ய முடியும். கரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் பணி நீட்டிப்பு என்பது, என் கையில் இருந்தால் செய்து விடுவேன். அது முடியவில்லை. இதை புரிந்து காத்திருங்கள்" என்று வேதனையுடன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT