Published : 26 Jun 2023 08:11 PM
Last Updated : 26 Jun 2023 08:11 PM

சொத்து வரி நிலுவை தொகை மீது மாதந்தோறும் 1% தனி வட்டி: சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான சொத்து வரியை மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு, வரித்தொகை மீது மாதத்துக்கு ஒரு சதவீதம் தனிவட்டி விதிக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி பிரதான வருவாயாக உள்ளது. மொத்தமுள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டுக்கு 750 கோடி ரூபாய் என, ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வருவாய் வாயிலாக, மாநகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார தூய்மை பணிகள், திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால், 13 லட்சம் சொத்து உரிமையாளர்களில், 3.50 லட்சத்துக்கு மேற்பட்டோர் முறையான சொத்துவரி செலுத்தாமல் உள்ளனர். இவர்களால், மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், சொத்து வரி குறைவாக கணக்கிடப்பட்ட 3 லட்சம் சொத்து உரிமையார்களின் சொத்துகள் மறுமதிப்பீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சொத்துவரி நிலுவை வைத்துள்ளவர்கள் விபரங்களையும் மாநகராட்சி சேகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் 3.50 லட்சம் சொத்து உரிமையாளர்கள் 200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி வருவாய் துறையினர் கூறியதாவது: “தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட விதிப்படி, அரையாண்டு காலத்துக்குரிய சொத்து வரியை செலுத்தாதவர்கள், அதாவது கடந்த 2022 –23ம் ஆண்டுக்கான சொத்துவரியை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு, வரித்தொகை மீது மாதத்துக்கு ஒரு சதவீதம் தனிவட்டியுடன் சேர்த்து செலுத்த வழிவகை செய்யப்பட்டடுள்ளது.

அதன்படி, 9.50 லட்சம் சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை முறையாக செலுத்தி உள்ளனர். ஆனால், 3.50 லட்சம் சொத்து உரிமையாளர்கள் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். அவர்களின் நிலுவை தொகை மீது மாதந்தோறும் ஒரு சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும். மேலும், பல ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாதவர்களின் கட்டடங்கள், நிலங்கள் ஜப்தி செய்ய, புதிய சட்ட விதி அனுமதிக்கிறது.

அந்த சட்டவிதியை அமல்படுத்தவும் மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. அதன்படி, நான்கு ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்கள் விபரங்களை சேகரித்து வருகிறோம். அவர்களது கட்டடம் மற்றும் நிலம் ஆகியவை ‘ஜப்தி’ செய்யப்பட்டு, பொது ஏல அறிவிப்பு வெளியிடப்படும். ஏலத்துக்கு பின், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை எடுத்துக்கொண்டு, மீத தொகை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இதுபோன்ற நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொள்வதற்கு முன், சொத்துவரியை முறையாக செலுத்தி, இதுபோன்ற நடவடிக்கையை சொத்து உரிமையாளர்கள் தவர்க்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x