Published : 26 Jun 2023 07:53 PM
Last Updated : 26 Jun 2023 07:53 PM

“தரமான கல்வி வழங்குவதில் முதலிடம் நோக்கி தமிழகம்...” - சிற்பி திட்ட நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் நடந்த சிற்பி திட்ட நிறைவு விழாவில் உரையாற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: "தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் இன்றைக்கு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்துக்கு முன்னேறுவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக் கல்வித் துறை இன்றைக்கு சிறப்பாக செய்து கொண்டு வருகிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற “சிற்பி” நிறைவு விழாவில், சிற்பி திட்டத்தில் பயிற்சி முடித்த 5,000 மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடி அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார். மேலும், முதல்வர் சிற்பி கீதம் என்ற சிற்பி திட்ட மாணவ, மாணவியருக்கான பாடலையும் வெளியிட்டார்.

பின்னர், இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “கடந்த 13.09.2021 அன்று சட்டப்பேரவையில் இந்தத் திட்டத்தைப் பற்றி நான் அறிவித்தேன். சென்னை மாநகரில் இருக்கக்கூடிய 100 அரசு பள்ளிகளில், பள்ளிக்கு தலா 50 மாணவர்கள் வீதம் பங்குபெறக்கூடிய வகையில் இது திட்டமிடப்பட்டது. சிறுவர்களை இளமைக் காலம் முதல் பொது ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் ஆக்கக்கூடிய இந்தத் திட்டம் பயன்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.கடந்த 14.9.2022 அன்று கலைவாணர் அரங்கத்தில் இதை நான் தொடங்கி வைத்தேன். இந்தத் திட்டம் மூலம் குற்றமற்ற சிறந்த இளைய சமுதாயத்தினரை உருவாக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, 2,558 மாணவிகள், 2,442 மாணவர்கள் சிறந்த பொறுப்புள்ள சீர்மிகு சிற்பிகளாக இன்றைக்கு நீங்கள் எல்லாம் உருவாகி இருக்கிறீர்கள் அதை பார்த்து நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதை செய்துகாட்டுவதற்கு எல்லா வகைகளிலும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டிருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த பயிற்சிக் காலக்கட்டத்தில் நீங்கள் பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறீர்கள். அதையெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்னிடத்தில் பெருமையாக சொன்னார்கள். முக்கியமாக, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 5000 சிற்பி மாணவர்கள் சென்னை எழும்பூர் முதல் வண்டலூர் வரை சிறப்பு ரயில்களில் பயணம் செய்திருக்கிறார்கள்.இயற்கையை பேணும் விதமாக ஐந்தாயிரம் குழந்தைகளும் ஐந்து லட்சம் விதைப் பந்துகள் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள். அதுமட்டுமில்லாமல், ஐந்தாயிரம் மரக்கன்றுகளையும் நட்டிருக்கிறீர்கள். 74வது குடியரசு நாள் விழாவில், சிற்பி மாணவர் படையினராக அணிவகுப்பில் கலந்து கொண்டது அதுவும் மிடுக்கான நடையில் என்னை மிகவும் வியப்படைய வைத்திருக்கிறது.

இப்படி உங்களோட சாதனைகள் என்னை மட்டுமல்ல எல்லோரையும் வியப்படைய வைத்திருக்கிறது. இந்த இளம் வயதில் இந்தச் சாதனைகளைச் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது நீங்கள் இதை ஒரு பெரிய மைல் கல்லாக நினைக்கவேண்டும். இதுபோன்ற செயல்கள் உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தையும், உங்களுடைய சுற்றத்தையும் சீர்மைப்படுத்தும். அதோடு, சிறார் குற்றங்கள் கட்டுப்படுத்துவதில் தமிழக காவல்துறை இன்றைக்கு சிறப்பான கவனத்தைச் செலுத்திக் கொண்டு வருகிறது. சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபட குடும்ப உறுப்பினர்களோட கவனக் குறைவு, போதிய குடும்ப வருமானம் இல்லாமை, ஆதரவில்லாமல் சிறார்கள் வளர்வது, வேலைவாய்ப்பின்மை போன்றவை காரணமாக இருக்கிறது.

இவற்றைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து தடுக்க இது போன்ற திட்டங்கள் கைகொடுக்கும். போதை பொருள் ஒழிப்பு, குடிப்பழக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பெறச் செய்தல், அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா அமைப்புக்களுடன் தொடர்பினை ஏற்படுத்துதல், சுய ஆளுமை திறனை மேம்படுத்துதல், பெற்றோர்களது பேச்சை மதித்து நடத்தல், பொது மக்களோடு தொடர்பு, இளம் வயதிலிருந்து போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க செய்தல், தேசிய விழாக்களை கொண்டாடுதல், தேசிய சின்னங்களுக்கு மரியாதை செய்தல், மாநிலத்தின் செழுமை மற்றும் வளர்ச்சியை கண்டு பெருமை கொள்ளச் செய்தல் - ஆகிய பண்புகளை சிறுவர்களிடையே உருவாக்க வேண்டும்.

ஏனென்றால், இன்றைய இளைஞர்களே, நாளைய எதிர்காலம்.இளைஞர்களை சீர்படுத்தினாலே, எதிர்காலத்தை சீர்படுத்த முடியும். அப்படி உருவாகக்கூடிய இளைஞர்கள் சிறந்த சமுதாயத்தை நிச்சயமாக செதுக்குவார்கள்.தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் இன்றைக்கு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்துக்கு முன்னேறுவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக் கல்வித் துறை இன்றைக்கு சிறப்பாக செய்து கொண்டு வருகிறது. என்னைப் பொறுத்தவரை, மாணவர்களை தரமான‘மனிதர்களாக’ உருவாக்குதே அரசாங்கத்தின் கடமையாக நான் கருதுகிறேன். இதில் முக்கியமாக 'நான் முதல்வன்' என்ற திட்டம் தமிழக மாணவ மாணவியரை அனைத்துத் திறமைகளும் கொண்டவர்களாக வளர்க்கின்ற திட்டமாக இது அமைந்திருக்கிறது.

இதனுடைய பயன், தலைமுறை தலைமுறைக்கு நிச்சயமாக தொடரும். 100 விழுக்காடு படிப்பறிவு என்பதை நாம் நிச்சயம் எட்டியாக வேண்டும். அனைவருக்கும் கல்வியைக் கொடுத்தாக வேண்டும். இடையில் நின்றுவிடும் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்குள் அழைத்து வர முயற்சிக்க வேண்டும்.அதிலும் குறிப்பாக, கற்றல் குறைபாடுகள் உடைய குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற வேண்டும்.இங்கே வந்திருக்கின்ற உங்களிடம் நான் வைக்கின்ற வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். பள்ளியோடு கல்வியை நிறுத்திடாமல் எல்லோரும் கல்லூரிகளுக்கு போகவேண்டும்.

நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். நன்றாக விளையாடி உடலை உறுதி செய்யுங்கள். சமூகத்தைப் படியுங்கள். அந்தக் கல்வியின் மூலமாக பகுத்தறிவையும், சுயமரியாதையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். அறிவியல் மனப்பான்மைய வளர்த்துக் கொள்ளுங்கள். அந்தப் படிப்பை வைத்து சிந்தியுங்கள். புதிய புதிய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்துங்கள். படிப்பு மட்டும்தான் உங்களிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாத சொத்து.உங்களுடைய படிப்பையும் திறமையும் பார்த்து, பெரிய பெரிய கம்பெனிகள் உங்களை அழைத்து வேலை கொடுக்க வேண்டும். நீங்களும் தொழில் தொடங்கி, நிறைய பேருக்கு வேலை கொடுக்க வேண்டும்.

உங்களோட மற்ற கவலைகளை போக்குவதற்கு மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினான நான் இருக்கேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. படிக்கின்ற காலத்தில் உங்களுக்கு வேறு எதிலும் கவனச் சிதறல்கள் இருக்கக் கூடாது.இன்றைக்கு போதை ஒழிப்பு நாள். அதனால் கேட்டுக்கொள்ள விரும்புவது, எந்தவிதமான போதைப் பழக்கத்துக்கும் நீங்களும் அடிமையாகக் கூடாது. உங்கள் நண்பர்களையும் அடிமையாக விடாதீர்கள்.

இன்றைக்கு உலக போதை ஒழிப்பு நாள். உங்களை சுத்தியிருகிறவர்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டியது… “போதை என்பது உங்கள் உடலுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும், எதிர்காலத்துக்கும் அது மிக, மிக கேடு. அதனை புறந்தள்ளி போதையற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x