Published : 26 Jun 2023 04:23 PM
Last Updated : 26 Jun 2023 04:23 PM
மதுரை: தமிழகம் முழுவதும் சமூகத்தில் செல்வாக்கு மிக்க 5 குடும்பங்ளை சந்தித்துப் பேச கட்சி நிர்வாகிகளை பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு பாஜக பல்வேறு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. மக்கள் தொடர்பு பேரியக்கம் என்ற பெயரில் பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடத்தப்படுகிறது. அடுத்து, சமுதாயத்தில் முக்கிய நபர்களை நேரில் சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு திரட்டுமாறு கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக நிர்வாகிகளுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அனுப்பியுள்ள கடிதம்: ''பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகளை மக்கள் தொடர்பு பேரியக்கமாக ஜூன் 1 முதல் நடத்தி வருகிறோம். தற்போது அனைத்து நிர்வாகிகளுக்கும் தனிப்பட்ட இலக்காக ஒரு முக்கிய பணி வழங்கப்படுகிறது.
அதன்படி, சமுதாயத்தில் மக்கள் செல்வாக்கு மிக்க நபர்களில் குறைந்தது ஐந்து குடும்பங்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று, அவர்களை சந்தித்து தங்களை அறிமுகப்படுத்தி பேச வேண்டும். அவர்களிடம் நம் தேசம், நமது கட்சி, சிறப்பான ஆட்சி, நமது திட்டங்கள், ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சிகள், மாற்றங்கள், முன்னேற்றங்கள் பற்றிய விளக்கம் அளிக்க வேண்டும். அவர்களின் கருத்துகளையும் விவாதம் இல்லாமல் தெரிந்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, மாற்றத்தின் தேவைகள், அவசியங்கள் பற்றியும் பேசலாம்.
இதற்காக அளிக்கப்பட்டு படிவத்தில் தாங்கள் தொடர்புகொண்டு பேசிய குடும்பத்தின் விவரங்கள், அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஆகிவற்றுடன் வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். உடனே இணைப்பு அனுப்பப்படும். அந்த இணைப்பில் சென்று குடும்ப விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் உண்மையில் எந்தெந்த நிர்வாகிகள் கட்சி வளர்ச்சிக்கு பணிபுரிந்துள்ளனர் என்பதை என்னால் அறிய முடியும். இதனால் வீட்டுத் தொடர்பு நிகழ்ச்சியை செய்து முடிக்க வேண்டும்'' என்று அந்தக் அண்ணாமலை கடிதத்தில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT