Published : 26 Jun 2023 03:35 PM
Last Updated : 26 Jun 2023 03:35 PM

ஆகமம், பூஜைகளில் தேர்ச்சிப் பெற்றவர்களை அர்ச்சகராக நியமிக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்கலாம். அந்தந்த கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் சுகவனேஷ்வரர் கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்கள் பணியிடங்களை நிரப்ப கோயில் நிர்வாகம் கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. ஆனால், இந்த அறிவிப்பு ஆகம விதிகளைப் பூர்த்தி செய்யும் விதமாக வெளியிடப்படவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட அர்ச்சகர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன், "ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர் நியமனமும் கட்டாயம் நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. சேலம் சுகவனேஷ்வரர் கோயிலில் ஆகம விதிகளின்படி பாரம்பரியம், கோயில் மரபு மற்றும் வழக்கத்துக்கு உட்பட்டே அபிஷேகம், ஆராதனைகளை மேற்கொள்ள அர்ச்சகர்களை நியமிக்க முடியும். ஆனால் இந்த விதிகளை கடைபிடிக்காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக இந்த அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளனர்" என வாதிட்டார்.

அறநிலையத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், "ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களைக் கண்டறிய ஏற்கெனவே உயர் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சொக்கலிங்கம் தலைமையில் குழு அமைத்துள்ளது. அந்தக் குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் வரை ஆகம விதிகளைக் கடைபிடிக்கும் கோயில்களின் தலைமை அர்ச்சகர்கள் அளிக்கும் தகுதிச் சான்றின் அடிப்படையில் கோயில்களில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்களை நியமிக்க சட்டத்தில் வழிவகை உள்ளதால், அதற்கு அனுமதிக்க வேண்டும்" என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார்.

இந்த வழக்கில், இன்று பிறப்பித்த தீர்ப்பில், ஆகம விதிகளைக் கடைபிடிக்கும் கோயில்களின் தலைமை அர்ச்சகர்கள் அளிக்கும் தகுதிச்சான்றின் அடிப்படையில் கோயில்களில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்களை நியமிக்கும் அரசின் சட்டத்தை ஏற்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், கோயில்களின் ஆகமத்தை கண்டறிய அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை. குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகராக நியமிக்கலாம். அந்தந்த கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்று நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x