Published : 26 Jun 2023 02:35 PM
Last Updated : 26 Jun 2023 02:35 PM

“மக்களுக்கு எதுவும் செய்ய முடியாததால் ராஜினாமா செய்யப் போகிறேன்” - மதுரை எம்எல்ஏ பூமிநாதன் அதிரடி

மதுரை: ‘‘2 ஆண்டுகளாக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. இந்தப் பதவியை பெருமைக்கு வைத்து என்ன பயன்? அதனால், நான் எனது எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்யப் போகிறேன். இதனை வைகோவிடம் சொல்லிவிட்டு முதல்வரை சந்திக்கப் போகிறேன்” என மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தெரிவித்துள்ளார். விரக்தியில் கூறிய சம்பவம், அக்கட்சியைத் தாண்டி அவரை வெற்றி பெறவைத்த திமுக கட்சி வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவை வைகோ ஆரம்பித்த காலம் முதல் அவருடன் பயணிப்பவர் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன். வைகோவுடன் சேர்ந்து பொடா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தவர். மதிமுகவில் வைகோவுடன் சேர்ந்து அரசியல் பயணம் செய்த பலரும் அவரை விட்டு பிரிந்து மாற்று கட்சிகளுக்கும், அரசியலில் இருந்து ஒதுங்கிய நிலையில் பூமிநாதன் மட்டும் வைகோவின் தீவிர பக்தராக அவருடன் தொடர்ந்து பயணித்து வருகிறார். அதனால், பூமிநாதன் தமிழகம் முழுவதும் மதிமுக கட்சியினர் அறிவர்.

தேர்தல் நிதி கொடுப்பதாக இருக்கட்டும், கட்சி நிகழ்ச்சிகள், போராட்டங்களுக்கு ஆட்கள் திரட்டுவது போன்ற பூமிநாதன் அக்கட்சியில் தீவிரமாக களப் பணியாற்றி வருகிறார். அவரது இந்தப் பணியையும், விசுவாசத்தையும் பார்த்து, கூட்டணியில் மதுரையில் மதிமுக போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பூமிநாதனுக்கு வாய்ப்பு வழங்கி வந்தார் வைகோ. அப்படி அவருக்கு வழங்கிய வாய்ப்பில் மதுரை தெற்கு தொகுதியில் 3 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மதிமுக பலமான கூட்டணியில் இருக்கோ, இல்லையோ கட்சி கட்டளையிட்டால் பொருளாதார இழப்புகளை சந்தித்தாலும் தொடர்ந்து தேர்தலில் ஆர்வமாக பூமிநாதன் போட்டியிட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதுரை தெற்கு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. மூன்று முறை பூமிநாதன் அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், அந்தத் தொகுதி மதிமுகவுக்கு கூட்டணியில் ஒதுக்கும்போது அத்தொகுதியின் வேட்பாளராக வைகோவின் முதல் தேர்வாக பூமிநாதனே இருந்தது. பூமிநாதனும் இந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். இதை அவரே ஒரு முறை மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்றபோது உருக்கமாக தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘மூன்று முறை எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தேன். நான்காவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்காகதான் மாநகராட்சி கூட்டத்தை கூட தவறவிடக் கூடாது என்று பேச வந்தேன்’’ என்றார்.

எம்எல்ஏவாக இருக்கக் கூடியவர்கள் பெரும்பாலும் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள். ஆனால், பூமிநாதன் சென்னையில் சட்டபேரவை நிகழ்ச்சி இல்லாமல் இருந்து மாநகராட்சி கூட்டம் நடந்தால் முதல் ஆளாக கூட்டத்தில் பங்கேற்று தன்னுடைய தொகுதிக்கட்பட்ட மாநகராட்சி வார்டு மக்களுடைய பிரச்சனைகளை கூறி, அதற்கு தீர்வு காண வலியுறுத்துவார். கட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்ள ஆர்வப்படாமல், அரசு நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கும் ஒரு எம்எல்ஏவாக பூமிநாதன் இருந்து வருகிறார். அதுபோல், கட்சித் தொண்டர்கள், தொகுதி மக்கள் வீட்டு விஷேச நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். அதனால், கட்சி தொண்டர்கள், தொகுதி மக்களிடம் பூமிநானுக்கு நல்ல பெயர் உண்டு.

ஆனால், சமீப காலமாக அவர், தொகுதி மக்கள் தன் மீது வைத்திருக்கும் மதிப்பை தன்னால் காப்பாற்ற முடியவில்லையே, அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகளை கூட தன்னால் செய்து கொடுக்க முடியில்லை என்று தன்னுடைய கட்சி நிர்வாகிகளிடம், நெருக்கமானவர்களிடம் விரக்தியுடன் கூறி வந்தார்.

இந்நிலையில், மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. வழக்கமாக மாநகராட்சியில் தன்னுடைய தொகுதி வார்டு மக்களுடைய பிரச்சினைகளை பொறுமையாகவும், நிதானமாகவும் எடுத்து கூறும் பூமிநாதன் எம்எல்ஏ, இம்முறை பேச்சை தொடங்கும் முதலே ஆவேசத்துடனே பேசினார்.

அவர் பேசுகையில், ‘‘எம்எல்ஏ ஆகி 2 ஆண்டுகளாகிவிட்டது. மக்களுக்கு சேவை செய்யவே இந்தப் பதவிக்கு வந்தேன். மாநகராட்சிக் கூட்டங்களில் தொடர்ந்து பேசி வருகிறேன். நேரிலும் சந்தித்து அதிகாரிகளிடம் முறையிடுகிறேன். ஆனால், தொகுதி மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை கூட செய்து கொடுக்க முடியவில்ல. தினமும் பல ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் செல்லும் தெப்பக்குளம் சாலையை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் கூறிவிட்டேன். இதுவரை சீரமைக்கவில்லை.

குடிநீரில் கழிவு நீர் கலக்கிறது. பாதாள சாக்கடைப் பணிக்காகவும், பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காகவும் தோண்டிய சாலைகளை இதுவரை புதிதாக போட்டுக் கொடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகளையும் குறை சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனெ்றால் ஊழியர்களில் ஆரம்பித்து அதிகாரிகள் வரை மாநகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை. மக்களையும் திருப்திப்படுத்த முடியவில்லை. தொகுதிக்குள் சென்றாலே மக்கள் காரை சூழ்ந்துவிடுகிறார்கள்.

மக்களுக்கு உதவாத பதவியை பெருமைக்கு வைத்து என்ன பயன்? அதனால், நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யலாம் என முடிவெடுத்துள்ளேன். ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுக்கப் போகிறேன். இதை எங்கள் தலைவர் வைகோவிடம் சொல்ல போகிறேன்’’ என்றார்.

எம்எல்ஏவின் இந்த விரக்தி பேச்சைக் கேட்ட மேயர் இந்திராணி, ‘‘அண்ணா, உங்கள் வருத்தம் எங்களுக்கு புரிகிறது. உடனடியாக உங்கள் தொகுதி வார்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்க்க சொல்கிறேன்’’ என்றார். இவர் பேசுவதற்கு முன் துணை மேயர் நாகராஜனும், ‘‘நான் பொறுப்பேற்று இதுவரை என்னுடைய வார்டில் ஒரு பணியும் நடக்கவில்லை. துணை மேயராக இருந்து என்ன பயன்?’’ என்றார்.

உடனே எழுந்த மாநகராட்சி அதிமுக எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா, ‘‘எம்எல்ஏ, துணை மேயர் இரண்டு பேரின் பேச்சே, இந்த அரசின் 2 ஆண்டு கால ஆட்சியும், மாநகராட்சியின் அவலங்களுக்கும், நிர்வாக சீர்கேடுகளுக்கும் சாட்சியாக உள்ளது’’ என்றார்.

உடனே திமுக கவுன்சிலர்கள் எழுந்து கூச்சல் போடவே, அதற்கு அதிமுக கவுன்சிலர்கள் பேசவே, மாநகராட்சி கூட்டத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. பூமிநாதன் இந்தப் பேச்சு, திமுக கூட்டணியில் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x