Published : 26 Jun 2023 02:19 PM
Last Updated : 26 Jun 2023 02:19 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோயில் பின்புறம் குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை 4-வது வார்டு அங்காளம்மன் கோயில் பின்புறம் உள்ள பக்கிரி மஸ்தான் சந்தில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் சாக்கடைக் கால்வாய் வசதி இல்லை. இதனால் இங்குள்ள தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மழை நீர் தேங்கி, கழிவுநீராக மாறியுள்ளது.
இதனால் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாடுவதாலும், கொசு உற்பத்தி பெருகியுள்ளதாலும், பல்வேறு சுகாதார சீர்கேடுகளால் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது மழை பெய்து வரும் நிலையில், தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: "இங்குள்ள காலி இடத்தில் மழை நீர் தேங்கி கழிவுநீராக மாறியுள்ளது. எங்கள் சொந்த செலவில் கடந்த 3 ஆண்டுகளாக மோட்டார் மூலம் கழிவுநீரை அகற்றி வருகிறோம். அடிக்கடி மழை பெய்வதால் நீர் முழுவதையும் அகற்ற முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு பாதிப்பால் 7 வயது சிறுமி இறந்துவிட்டார். தற்போதும் பலருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது.
இந்த விடத்தில் 3 அடி உயரத்துக்கு கழிவுநீர் தேங்கி உள்ளதால், மண்ணைக் கொட்டி உயர்த்த வேண்டும் என இடத்தின் உரிமையாளரிடம் பல முறை தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இது குறித்து நகராட்சி நிர்வாகம், அதிமுக, திமுக எம்எல்ஏக்கள், வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட பலரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்காக பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். இங்கு வாழ்வதே மிகவும் சிரமமாக உள்ளது. எனவே தொடர்புடைய அலுவலர்கள் இப்பகுதியில் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் கழிநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT