Published : 26 Jun 2023 01:12 PM
Last Updated : 26 Jun 2023 01:12 PM

102 பேர் 200-க்கு 200 கட் ஆப்: பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு 

பட்டியல் வெளியிட்ட அமைச்சர்

சென்னை: பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், 102 பேர் 200-க்கு200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர்

தமிழகத்தில் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகி்ன்றன. இவற்றில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (Single Window System) பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. ஆன்லைன் வழியிலான இக்கலந்தாய்வை தமிழக அரசு சார்பில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.

அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டில் (2023-2024) பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 4-ம் தேதி தொடங்கி, ஜுன் 4-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் பதிவு செய்தனர். ஆனால், அவர்களில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 பேர்தான் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். இதைத்தொடர்ந்து, அவர்களின் சான்றிதழ்கள் ஜுன் 5 முதல் 20-ம் தேதி வரை ஆன்லைனிலேயே சரிபார்க்கப்பட்டன. இதில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைபட்டியல் ஜுன் 26-ம் தேதிவெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி வெளியிட்டார். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் தரவரிசையை www.tneaonline.orgஎன்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

இதன்படி 102 பேர் 200-க்கு200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். திருச்செந்தூரைச் சேர்ந்த மாணவி நேத்ரா முதல் இடமும், தருமபுரியைச் சேர்ந்த ஹரிணி 2வது இடமும், திருச்சியைச் சேர்ந்த ரோஷினி பானு 3வது இடமும் பிடித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x