Published : 25 Jun 2023 05:06 PM
Last Updated : 25 Jun 2023 05:06 PM
வேலூர்: வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் 4-வது மகா கும்பாபிஷேகம் (ஜூன் 25-ம் தேதி) இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது வேலூர் கோட்டை. இந்த கோட்டை வளாகத்துக்குள் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பல நூறு ஆண்டுகள் வழிபாடு இல்லாமல் இருந்த கோட்டை கோயிலில் கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி, 1997-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி, 2011-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி என ஏற்கனவே மூன்று முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 2023-ம் ஆண்டு 4-ம் மகா கும்பாபிஷேகம் நடத்துவற்கான ஏற்பாடுகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன.
ரூ.2 கோடி மதிப்பில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் முன் உள்ள பெரிய கொடி மரத்துக்கும், ரூ.43 லட்சம் மதிப்பில் அம்பாள் சந்நிதி முன் சிறிய கொடி மரத்துக்கும் தங்க முலாம் பூசப்பட்டன. அதோடு, தங்க கோபுர கலசங்கள் உள்பட அனைத்து தங்க வேலைப்பாடுகளும் மொத்தம் ரூ.4 கோடி மதிப்பில் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடந்த புதன்கிழமை காலை முதல் 4 கால யாக பூஜைகள் நடைபெற்று வந்தன. இதற்காக கோயில் வளாகத்தில் 4 பிரதான மகா யாக சாலைகள், 15 பரிவார யாக சாலைகள் உள்பட மொத்தம் 54 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணியளவில் நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. காலை 10.30 மணியளவில் ராஜகோபுரம், விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்கள் மீதும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோட்டை கோயிலுக்கு ரூ.5 கோடி மதிப்பில் அளிக்கப்பட்டிருந்த புதிய தங்கத்தேருக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ராஜகோபுர கலசங்களுக்கு ஸ்ரீ புரம் ஸ்ரீ நாராயணி பீடம் ஸ்ரீ சக்திஅம்மா தலைமையிலும், விமான கோபுர கலசங்களுக்கு ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில் தருமஸ்தாபனத் தலைவர் கலவை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள், மகாதேவமலை மகானந்த சித்தர் சுவாமிகள் ஆகியோர் தலைமையிலும் சிவச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
காஞ்சிபுரம் கே.ராஜப்பா சிவச்சார்யர், மாயவரம் சிவபுரம் வேத பாடசாலை முதல்வர் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சார்யர் ஆகியோர் தலைமையில் 175 சிவச்சார்யர்கள் மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, ட்ரோன் மூலம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார்(அணைக்கட்டு), கார்த்திகேயன்(வேலூர்), மாநகராட்சி மேயர் சுஜாதா உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோட்டை கோயில் வளாகம் மற்றும் உட்புறக்கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இரவில் கோயில் கோபுரம் மீது வண்ண மின்விளக்குகள் ஜொலித்தன. கோயில் வளாகம் முழுவதும் வண்ண, வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT