Published : 25 Jun 2023 04:00 PM
Last Updated : 25 Jun 2023 04:00 PM
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பாறைகள் மீது விரைவு ரயில் மோதியது. ரயிலை கவிழ்க்க சதி வேலை நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் சென்னை புலனாய்வுக் குழுவினர் மோப்ப நாயுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், மைசூரில் இருந்து பெங்களூர் மற்றும் திருப்பத்தூர், வாணியம்பாடி ஆம்பூர் வழியாக சென்னை வரை செல்லக்கூடிய காவிரி விரைவு ரயில் இந்த வழித்தடத்தில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆம்பூர் அருகே இன்று ( 25-ம் தேதி ) விடியற்காலை 3:30 மணியளவில் காவிரி விரைவு ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது.
ஆம்பூர் அடுத்த வீரவர் கோயில் அருகே விரைவு ரயில் வந்தபோது, பெங்களூரு - சென்னை செல்லும் வழித் தடத்தில் தண்டவாளத்தின் மீது பாறை கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதை கண்ட ரயில் இன்ஜின் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால், ரயில் வந்த வேகத்தில் அந்த பாறை கற்கள் மீது ரயில் இன்ஜின் மோதியது. இதில், பாறை கற்கள் சிதறின. இருந்தாலும், பாறை கற்கள் மீது ரயில் இன்ஜின் மோதிய சத்தம் பெரிய அளவில் கேட்டது.
அதிகாலை நேரம் என்பதால் ரயிலில் பயணித்த பயணிகள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ரயில் மோதிய சத்தம் கேட்டதும், பயணிகள் அலறியடித்துக் கண்விழித்து ரயில் விபத்துக்குள்ளானதாக உணர்ந்து கூச்சலிட்டனர். உடனே, ரயில் இன்ஜின் ஓட்டுநர் ரயிலின் வேகத்தை குறைத்தார். பிறகு ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
இது குறித்து ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ரயில்வே நிலையத்துக்கு ரயில் இன்ஜின் ஓட்டுநர் தகவல் கொடுத்தார். அதன்பேரில், ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி தலைமையிலான ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீரவர் கோயில் அருகாமையில் உள்ள கடைகள் மற்றும் கோயில் பகுதிகளில் இருந்த நபர்களிடம் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில், எந்த துப்பும் கிடைக்கவில்லை. ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து, சென்னையில் இருந்து ரயில்வே புலனாய்வுக் குழுவினர் மோப்ப நாய் ஜான்சியுடன் ஆம்பூர் வந்தனர். மோப்ப நாயின் பயிற்சியாளர் ராபின் உத்தரவுபடி மோப்ப நாய் ஜான்சி தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட இடத்தில் இருந்து கிழக்கு நோக்கி சிறிது தூரம் சென்றது. பின்னர், மேற்கு நோக்கி சிறிது தூரம் சென்ற மோப்ப நாய் அங்கேயே நின்றது.
பிறகு மீண்டும் திரும்பி பாறை கற்கள் வைக்கப்பட்ட இடத்துக்கு வந்தது. பச்சக்குப்பம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட காவேரி விரைவு ரயில் 30 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பெங்களூர் - சென்னை வழித்தடத்தில் செல்லும் திருவனந்தபுரம் விரைவு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் அரை மணி நேரம் காலதாமதமாக இயக்கப்பட்டது. சென்னை - பெங்களூரு ரயில் வழித்தடத்தில் நாள் தோறும் 120-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும், 100-க்கணக்கான சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில் வழித் தடம் என்பதால் தண்டவாளத்தின் மீது பாறைகள் கற்கள் அடுக்கி வைக்கப்பட்ட இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 ரயில்கள் தடம் புரண்டதால் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை அருகே ரயில் தண்டவாள இணைப்பு (பாயிண்ட்) சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் பாறைகள் கற்கள் அடுக்கி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ரயில்வே உட்கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை டிஎஸ்பி பெரியசாமி தலைமையிலான 10 காவலர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT