Published : 25 Jun 2023 03:45 PM
Last Updated : 25 Jun 2023 03:45 PM

100% சாதிவாரி இடப்பங்கீடே இலக்கு - வி.பி.சிங் பிறந்தநாளில் உறுதியேற்க ராமதாஸ் அழைப்பு

சென்னை: 100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற இலக்கை எட்டுவதற்கு சமூகநீதி நாயகன் வி.பி.சிங்கின் பிறந்தநாளில் மீண்டும் உறுதியேற்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: ''சமூகநீதி தளத்தில் என் மனம் கவர்ந்தவர்களில் ஒருவரும், எனது நண்பருமான முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 93-ஆம் பிறந்தநாள் இன்று. இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை எதிர்ப்பு சுனாமிகளை புறம்தள்ளி செயல்படுத்தியவர்; அதனால் ஆட்சிக் கட்டில் பறிக்கப்பட்டதை அலட்சியம் செய்தவர்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில், மக்கள்தொகைக்கு இணையான அளவில் இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். ஆனால், பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 50% உச்சவரம்பு தான் அதற்கு தடையாக இருந்தது. உயர்வகுப்பு ஏழைகளுக்காக இட ஒதுக்கீட்டு வழக்கில் அந்த உச்சவரம்பு தகர்க்கப்பட்டு விட்ட நிலையில், இடஒதுக்கீடு என்ற தத்துவத்தை ஒதுக்கி வைத்து விட்டு, இடப்பங்கீடு என்ற தத்துவத்தை பின்பற்ற வேண்டும்.

மத்தியிலும், மாநிலத்திலும் 100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற சமூகநீதி இலக்கை அடைவது தான் நமது லட்சியமாக இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி பயணிக்கவும், போராடவும் சமூகநீதி நாயகன் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாளில் நாம் அனைவரும் மீண்டும் உறுதியேற்போம்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x