Published : 25 Jun 2023 03:12 PM
Last Updated : 25 Jun 2023 03:12 PM
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று(ஜூன்.25) தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றம் கடந்த 17ம் தேதி நடந்தது. இதில் மேள தாளம் முழங்கிட வேத மந்திரங்கள் ஓதிட, தேவாரம், திருவாசகம் பாடிட உற்சவ ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர், கோவில் கொடி மரத்தில் கொடியேற்றனார். இதனைத் தொடர்ந்து தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. விழாவின் 5வது நாள் உற்சவமான தெருவடைச்சான் உற்சவம் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. நேற்று(ஜூன்.24) தங்க ரதத்தில் பிச்சாடனர் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஜூன்.25) நடந்தது.
மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேளதாளம் முழங்கிட, வேத மந்திரங்கள் ஓதிட, தனித்தனி தேர்களில் இன்று அதிகாலை எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என கோஷங்களை எழுப்பியவாறு வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இன்று(ஜூன்.25) மாலை கீழவீதி தேர்நிலையை அடையும். நான்கு வீதிகளிலும் மண்டகபடிதாரர்கள் சுவாமிகளுக்கு சிறப்பு படையல் செய்தனர்.
தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணி மேற்கொண்டனர். சிவனடியார்கள் சிவ நடனம் ஆடியபடி சென்றனர். தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனையை நிகழ்த்திச் சென்றனர். பெண்கள் கும்மியடித்து சென்றனர். திருவிளக்கு முன்பு சிவ பக்தர்கள் சிவ வாத்தியங்களை முழங்கி நடனமாடி சென்றனர்.
நாளை( ஜூன்.26) ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெற உள்ளது. நாளை அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்க இருக்கின்றன. பிற்பகல் 2 மணிக்குமேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், சித்சபா பிரவேசமும் நடக்க இருக்கிறது.
28 தேதி, புதன்கிழமை இரவு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது. இதற்கான ஏற்படுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். ஆனித்திருமஞ்சன தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நகரில் வெளிநாடு, வெளி மாநில மற்றும் உள்ளூர் பக்தர்கள் குவிந்துள்ளனர். சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT