Published : 25 Jun 2023 12:53 PM
Last Updated : 25 Jun 2023 12:53 PM

போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பான பணி: காவல் அதிகாரிகள், காவலர்கள் 5 பேருக்கு முதல்வர் பதக்கம்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி 5 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 09.05.2022 அன்று சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையிலன் போது “சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள் / காவலர்களை ஊக்குவிப்பதற்கென முதல்வர் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 03.08.2022 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துறைக்கேற்ப 5 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும்.

இதன்படி, வெ.பத்ரிநாராயணன், இ.கா.ப (காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம்), டோங்கரே பிரவின் உமேஷ், இ.கா.ப (காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம்), மா.குணசேகரன், காவல் துணை கண்காணிப்பாளர் (இருப்பு பாதை, சேலம் உட்கோட்டம்), சு.முருகன் (காவல் சார்பு ஆய்வாளர், நாமக்கல் மாவட்டம்), இரா.குமார் ( முதல் நிலை காவலர்- 1380, நாமக்கல் மாவட்டம்) ஆகிய 5 பேருக்கும் முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் அஸ்ரா கர்க்கின் (காவல்துறைத் தலைவர், தென் மண்டலம், மதுரை) பணியை அங்கீகரித்து அவருக்கு ரொக்கப் பரிசு இல்லாமல், "சிறப்பு பதக்கம்" தனி நேர்வாக வழங்கப்படுகிறது. இவர்கள் செய்த பணியின் விவரம்:

அஸ்ரா கர்க்: இவரின் தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த கண்காணிப்பின் மூலம் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் (NDPS Act) சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டள்ளன. மூத்த அதிகாரிகளுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார் மற்றும் 2022-2023ல் 1843 நபர்கள் பிணைக்கப்பட்டுள்ளனர். இது சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியது.

வெ.பத்ரிநாராயணன்: போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளினால், போதை பொருட்கள் இல்லாத கோவை மாவட்டத்தை உருவாக்க சீரிய முயற்சிகள் எடுத்துள்ளார். இம்மாவட்டத்தில் இவருடைய தீவிர முயற்சிகளின் காரணமாக 128 கல்லூரிகளில் போதை பொருட்களுக்கு எதிரான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள், புதிய தலைமுறை செயற்கை போதை பொருட்கள், கஞ்சா சாக்லேட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டு மட்டும், போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் கஞ்சா வியாபாரிகள் பலர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களை ஈடுபடுத்தியதின் விளைவாக, கோவை மாவட்டத்திலுள்ள 108 கிராம பஞ்சாயத்துகள் கஞ்சா இல்லாத கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன.

டோங்கரே பிரவின் உமேஷ்: திருவெறும்பூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது, கரூரில் சிறப்பு சோதனை மூலம் நன்கு வளர்ந்த சுமார் 2,790 கிலோ எடையுள்ள 3,584 கஞ்சா செடிகள் இவரால் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் 10 வணிக வழக்குகளும் அடங்கும். 540 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அதில் 69 குற்றவாளிகள் "போதைப் பொருள் குற்றவாளிகள்" என்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 2,266.90 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 98 பாட்டில்கள் MEPHENTERMINE SULPHATE INJECTION IP கைப்பற்றப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் இதுவரை போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 345 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

குணசேகரன்: இவரது தலைமையில் தனிப்படை அமைத்து ரயில் வண்டிகளில் தீவிர சோதனை மேற்கொண்டதில் ”கஞ்சா வேட்டை 2.0” மற்றும் ”கஞ்சா வேட்டை 3.0”-ன்போது கஞ்சா கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்ட பல குற்றவாளிகளை குண்டர்தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு 1119 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு 77 குற்றவாளிகளை கைதுசெய்து 131 வழக்குகள் பதிவு செய்துள்ளார்.

முருகன் மற்றும் குமார்: இருவரும் காவல் கண்காணிப்பாளர், நாமக்கல் மாவட்டம். காவல் துணை கண்காணிப்பாளர், நாமக்கல் உட்கோட்டம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காண அதிக முயற்சிகளை எடுத்து தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ஆதாரங்களை சேகரித்தும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு பயணம் செய்து ஆதாரங்களை திரட்டியும் குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்ய உதவியாக இருந்துள்ளார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x