Published : 25 Jun 2023 12:17 PM
Last Updated : 25 Jun 2023 12:17 PM

வண்டலூரில் திட்டமிடாமல் கட்டிய பாலம் பயன் தரவில்லை!

வண்டலூர்: வண்டலூர் பூங்கா பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரூ.55 கோடி மதிப்பீட்டில் 6 வழிப் பாதையுடன் 711 மீ. நீளம் கொண்ட பாலம் கட்டப்பட்டது. இதில் சாலையின் நடுவே 9 தூண்களுடன் கூடிய உயர்நிலை மேம்பாலம் அமைக்கப்பட்டது.

இதனால் வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் எளிதாக ஜிஎஸ்டி சாலை செல்லும். இதனிடையே வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட மேம்பாலம் வண்டலூர் பூங்கா அருகே கட்டப்பட்ட மேம்பாலத்தின் அருகில் இறங்குகிறது. இங்குள்ள சர்வீஸ் சாலையில் ஏராளமான வாகனங்கள் தினமும் செல்வதால் ஏற்கெனவே ஏற்பட்ட நெரிசலை போல் அதிக அளவில் தற்போது மீண்டும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மேம்பாலம் அமைக்கப்பட்டும் பயன் இல்லாமல் உள்ளது. இது குறித்து வண்டலூரை சேர்ந்த பாலாஜி என்ற வாசகர் இந்து தமிழ் நாளிதழில் உங்கள்குரல் பகுதியில் கூறியதாவது: வண்டலூர் பூங்கா அருகில் பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் சிரமம் அடைகின்றனர். ஜிஎஸ்டி சாலையில் மேம்பாலம் உள்ளது.

அதேபோல் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலமும் ஜிஎஸ்டி சாலையில் இணைகிறது இந்த இரண்டு பாலங்கள் முறையாக ஆய்வு செய்யாமல் கட்டப்பட்டதால் தினம் தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது மாறாக அதிக அளவில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதி காலை முதல் மாலை வரை தொடர்ந்து நெரிசல் சிக்கி வருகிறது.

போக்குவரத்து போலீஸாரும் மிகுந்த சிரமங்களுக்கு இடையே போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். விரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளதால் அப்பொழுது இதைவிட கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

ஏற்கெனவே வண்டலூரை கடப்பதற்கு இந்த பாலங்கள் இல்லாத போது இப்பகுதியை கடப்பதற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் ஆகும். அதே நிலை மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை, வருவாய்த் துறையினர் கூட்டாக ஆய்வு செய்து நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து போக்குவரத்து ஆய்வாளர் ஹேமந்த் குமாரிடம் கேட்டபோது தினமும் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தி வருகிறோம். வண்டலூர் பூங்காவுக்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர். தனியார் பல்கலைக்கழகமும் உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும்போது இன்னும் நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் பகுதியில் ரவுண்டானா அமைத்தால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இருந்து வரும் வாகனங்களும் மீஞ்சூர் செல்லும் வாகனங்களும் நேரடியாக ஜிஎஸ்டி சாலை செல்லும் வகையில் ரவுண்டானா அமைத்தால் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

அரசு இதற்கு தனி கவனம் செலுத்தினால் மட்டுமே வருங்காலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும். இவ்வாறு கூறினார். நெடுஞ்சாலை துறை பொறியாளர் செல்வகுமார் கூறியதாவது: தற்போது கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் அமைக்க இருப்பதாலும், மத்திய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட இருப்பதாலும் மேம்பாலத்தில் எந்த மாற்றமும் செய்ய இயலாது.

மேலும் ரவுண்டானா அமைக்க போதுமான இட வசதியும் அங்கு இல்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. அரசு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஒரு குழு அமைத்தால் இதற்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x