Published : 25 Jun 2023 05:49 AM
Last Updated : 25 Jun 2023 05:49 AM
சென்னை: பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்தால் அரசியலமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்படும் அபாயம் இருப்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
சென்னை, தேனாம்பேட்டையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 70-ம் ஆண்டு விழா மற்றும் சம்மேளனத்தின் தென்சென்னை மாவட்ட 6-வது மாநாடு நேற்று நடைபெற்றது. விழாவை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மனிதக் கழிவை மனிதனே அள்ளுவது குறித்த புகைப்பட கலைஞர் பழனிகுமாரின் புகைப்படக் கண்காட்சியை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: மத்தியில் ஆளும் பாஜகவால் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது மக்கள் மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டமும் என்றால் அது மிகையில்லை. அவர்கள் கொண்டாடும் தீன்தயாள் உபாத்யாய், சவார்க்கர் ஆகியோர் அரசியலமைப்புச் சட்டம்உருவாக்கப்பட்டபோது அதைக்கண்டித்தவர்கள். இந்தச் சட்டங்களை மாற்ற வேண்டுமானால் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பெரும்பான்மை தேவை. தற்போது நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமும் நடத்தப்படுவதில்லை.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தபோதும் சட்ட மசோதாவை நிறைவேற்றும் அளவுக்கு பாஜகவுக்கு பெரும்பான்மை இருக்கிறது. இதே பெரும்பான்மை மீண்டும் கிடைத்துவிட்டால், நினைத்த நேரத்தில் எதை வேண்டுமானாலும் மாற்ற முடியும். அரசமைப்புச் சட்டத்தையும் மாற்றும் அபாயம் இருக்கிறது.
சாதி பெயரால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை ஒழிக்க வேண்டும் என்பதற்கான தொடக்கமாகவே பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் பற்றி எரியும் நிலையில் அதைப்பற்றி பேசாமல், தன் பெருமையை பிரதமர் பேசுகிறார். அடிப்படை உரிமைக்காக போராடுவோரின் குரலைக் கேட்கத் தயாராக இல்லாததற்கு மத அடிப்படையிலான காழ்ப்புணர்ச்சியே காரணம்.
இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் ஒருமித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கருத்தின்படி நமது முதல்வர் பங்கேற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
சில துறைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தலாம் என நினைக்கின்றனர். திமுகவை யாரும் அச்சுறுத்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் ஜி.மஞ்சுளா, துணைச் செயலாளர் நிஷா சத்யன், மாவட்டச் செயலாளர் ஜி.காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT