Last Updated : 25 Jun, 2023 03:40 AM

 

Published : 25 Jun 2023 03:40 AM
Last Updated : 25 Jun 2023 03:40 AM

காரைக்குடி | ஆசிரியர்கள் பாராட்டு விழாவுக்கு ஆசிரியர்களிடமே ரூ.1,000 வசூல் - முழு செலவையும் ஏற்றுக்கொண்ட அமைச்சர்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவி அன்னபூர்ணிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். உடன் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித்.

சிவகங்கை: காரைக்குடியில் ஆசிரியர்களை பாராட்டும் விழாவுக்கு ஆசிரியர்களிடமே தலா ரூ.1,000 வசூலித்ததை திருப்பி கொடுக்க சொல்லி முழு செலவையும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஏற்று கொண்டார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ஆகியோருக்கான பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் வரவேற்றார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்எல்ஏக்கள் தமிழரசி, மாங்குடி, நகராட்சித் தலைவர் முத்துத்துரை, பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: நீட் தேர்வு வந்த சமயத்தில் தமிழக மாணவர்கள் சற்று தயக்கமாக இருந்தனர். தற்போது இந்திய அளவில் தமிழக மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். தமிழர்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை. ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது பெட்ரோல் லிட்டர் ரூ.40- ஆக இருந்தது. தற்போது ரூ.100-க்கு மேல் சென்றுவிட்டது. அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருந்தது. ஆனால் தற்போது அமித்ஷா, அமித்ஷா என பூதம் போல் பயமுறுத்துகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற உலகம்பட்டி அரசு பள்ளி மாணவி அன்னபூரணிக்கு தனது சொந்த பணத்தில் ரூ.1 லட்சம் வழங்கினார். அதேபோல் பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கும் பணம் வழங்கினார். மேலும் விழாவுக்கான செலவு குறித்து அமைச்சர் கேட்டபோது, ஆசிரியர்களிடம் தலா ரூ.1,000 வசூலித்து நடத்துவதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினர். ஆசிரியர்களை பாராட்ட அவர்களிடமே பணம் வசூலிப்பதை ஏற்க முடியாது என கூறி, அந்த செலவை தான் ஏற்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x