Published : 24 Jun 2023 08:12 PM
Last Updated : 24 Jun 2023 08:12 PM

“வட்டார வள அலுவலர்களை பணி நீக்கம் செய்தது பழிவாங்கும் நடவடிக்கை” - சீமான் குற்றச்சாட்டு

சீமான் | கோப்புப்படம்

சென்னை: "வள அலுவலர்கள் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற நிலையில், தற்போது 9 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்துவிட்டுப் புதிதாகப் பணியாளர்களை நியமிக்கும் திமுக அரசின் முடிவு முழுக்க முழுக்க அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையே" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நூறு நாள் வேலை திட்டப்பணிகளைக் கண்காணித்து முறைப்படுத்துவதற்காக பணியமர்த்தப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்களை அரசாணை மூலம் திமுக அரசு ஒரே நாளில் பணி நீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு அலுவலர்களின் வாழ்க்கையோடு திமுக அரசு விளையாடுவது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

கடந்த 2014ம் ஆண்டு 22 மாவட்ட மற்றும் 543 வட்டார வள அலுவலர்கள் என மொத்தம் 565 வள அலுவலர்கள் போட்டித்தேர்வு மூலம் முறையாகப் பணி நியமனம் செய்யப்பட்டுப் பணிபுரிந்து வந்தனர். அவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாததோடு, கடந்த ஓராண்டாக அடிப்படை ஊதியமும் வழங்க மறுத்து திமுக அரசு அப்பட்டமான தொழிலாளர் விரோதப்போக்கினை கடைபிடித்து வந்தது.

கடந்த 9 ஆண்டுகளாக மிகக் குறைந்த ஊதியம் கொடுத்து அவர்களின் உழைப்பினை சுரண்டிவிட்டு, தற்போது ஒரே நாளில் பணியிலிருந்து நிரந்தரமாக திமுக அரசு நீக்கியிருப்பது கொடுங்கோன்மையாகும். வள அலுவலர்கள் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணி புரிந்தால் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற நிலையில், தற்போது 9 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், திடீரென அவர்கள் அனைவரையும் அரசாணை மூலம் பணி நீக்கம் செய்துவிட்டுப் புதிதாகப் பணியாளர்களை நியமிக்கும் திமுக அரசின் முடிவு முழுக்க முழுக்க அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையே ஆகும்.

ஏற்கெனவே, 1996-ம் ஆண்டு திமுக அரசால் நியமிக்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை, பின்னர் வந்த அதிமுக அரசுப் பணியிலிருந்து நீக்குவதும், திமுக அரசு மீண்டும் பணியில் சேர்ப்பதும் என கடந்த 33 ஆண்டுகளாக இரு திராவிட அரசுகளும் மாறி மாறி மக்கள் நலப்பணியாளர்களின் வாழ்வினையே முற்றாகச் சிதைத்து இருளில் தள்ளியுள்ளது. அப்படி ஒரு நிலைமை வள அலுவலர்களுக்கும் ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் திமுக அரசுக்கு உண்டு.

ஆகவே, திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் கைவிட்டு, 560 மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்களின் குடும்ப வாழ்வாதார சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அவர்களை பணி நீக்கம் செய்யும் அரசாணையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன். மேலும், அவர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் பணியில் சேர்த்து, உரிய ஊதியம் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x