Published : 24 Jun 2023 03:51 PM
Last Updated : 24 Jun 2023 03:51 PM
ஈரோடு: பெண்கள் பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 3 நாட்களில் மட்டும் 60 அழைப்புகள் காவல் துறைக்கு வந்துள்ளது என தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
ஈரோடு, கோபி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு ஈரோடு வந்தார். தொடர்ந்து மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு வெகுமதி வழங்கினார். அப்போது டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்களிடம் கூறியது: "இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக 'பெண்கள் பாதுகாப்பு திட்டம்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள் 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால் அவர்கள் இருக்கும் இடங்களுக்கே காவல் துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்துச் செல்லும். அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பெண்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 3 நாட்களில் மட்டும் 60 அழைப்புகள் காவல்துறைக்கு வந்துள்ளது. குறைவான தூரமாக இருக்கும் பட்சத்தில் காவல் துறை ரோந்து வாகனத்தில் அழைத்து சென்று விடப்படும். தூரம் அதிகமாக இருந்தால் ஆட்டோ அல்லது டாக்ஸிகளில் அனுப்பி வைக்கப்படுவர். அவர்களுடன் பாதுகாப்புக்காக போலீஸ் ஒருவர் செல்வார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT