Published : 24 Jun 2023 02:28 PM
Last Updated : 24 Jun 2023 02:28 PM
சென்னை: தமிழகத்தில் மிகப்பெரிய தொகுதி சோழிங்கநல்லூர். 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்டது. இதுமட்டுமல்ல, மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மருத்துவமனைகள் என சோழிங்கநல்லூர் மக்கள்நெருக்கடி மிகுந்த சென்னையின்புறநகர் பகுதியாக உள்ளது. மேடவாக்கம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், கேளம்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகள் இதனை சுற்றி அமைந்துள்ளன.
இந்த சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும்பெரும்பாலானவர்கள் சோழிங்கநல்லூரிலும், அருகில் உள்ள துரைப்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களிலும் பணியாற்றுகின்றனர். இங்குள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களில் சென்னைக்குள் இருந்தும், சுற்றுப்புற பகுதிகளில் மாணவர்கள், பணியாளர்கள் வந்து செல்கின்றனர்.
இதனால், சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள பழைய மாமல்லபுரம் சாலை அதாவது ராஜிவ்காந்தி சாலையில், எப்போதுமே வாகனங்கள் நிறைந்தே காணப்படும். இந்நிலையில், தற்போது சோழிங்கநல்லூர் சந்திப்புக்கு வரும் வாகன ஓட்டிகள் சந்திக்கும் பெரிய பிரச்சினை சாலையைகடக்க எடுக்கும் பகீரத பிரயத்தனம் தான்.
குறிப்பாக, மேடவாக்கம், பெரும்பாக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரைச் சாலை நோக்கி செல்லவும், அதே போல், கிழக்கு கடற்கரைச்சாலையில் இருந்து வரும் வாகனங்கள், மேடவாக்கம், பெரும்பாக்கம் சாலை நோக்கி செல்லவும் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘டேக் டைவர்சன்’ வாகன ஓட்டிகளை மிகுந்த இன்னலுக்குள்ளாக்கியுள்ளது.
தாம்பரம், செம்பாக்கம், மேடவாக்கம்,பள்ளிக்கரணையில் இருந்து சோழிங்கநல்லூர் செல்ல வேண்டியவர்கள் மேடவாக்கம் சந்திப்பு அல்லது பெரும்பாக்கம் புதுநகர் சந்திப்பு வழியாக செம்மொழிச்சாலை (பெரும்பாக்கம் மெயின் ரோடு) வந்துஅங்கிருந்து சோழிங்கநல்லூர் நோக்கிசெல்கின்றனர். மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் இணைப்பு சாலையான செம்மொழிச்சாலையின் நீளம் 4.5 கிமீட்டராகும். இந்த சாலையில் மேடவாக்கம் சந்திப்பில் இருந்து பெரும்பாக்கம் மேட்டுத்தெரு சந்திப்புவரை சாலை குறுகலாகவே இருக்கும். அதன்பின்னரே சாலை விரிவடையும்.
இந்த சூழலில் தற்போது அந்த சாலையில் மாதவரம்- சோழிங்கநல்லூர் மெட்ரோரயில் 5-வது வழித்தடத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், ஒரு வாகனம் மட்டுமே செல்லும் குறுகிய சாலையில் வாகனங்கள் பயணிக்க வேண்டும். இதனால், மேடவாக்கம் சந்திப்பில் இருந்து அடுத்த பெரும்பாக்கம் புதுநகர் சந்திப்பு செல்வதற்கே 15 நிமிடங்கள் வரைஆகும். அங்குள்ள சந்திப்பில் குறுக்கே செல்லும் வாகனங்களுக்காக காத்திருந்து செல்ல வேண்டும். இந்த சந்திப்பு தவிர்த்து மேலும் சில சந்திப்புகள் அந்த சாலையில் வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டே கடந்து செல்ல வேண்டியுள்ளது.
இதைத்தாண்டி சோழிங்கநல்லூர் சந்திப்பு சென்றுவிட்டால், பழைய மாமல்லபுரம் சாலையில் தெற்கு நோக்கி பயணிக்கவோ, கிழக்கு நோக்கி கிழக்கு கடற்கரை செல்லவோ சாலையை கடக்க இயலாது.
அந்த இடத்தில் சாலை தடுப்புகள்வைத்து இடதுபுறமாக திருப்பிவிடப்பட்டுள்ளது. அந்த சாலையில் 700 மீட்டர் பயணித்து ‘டாலர் கபே’ பேருந்துநிறுத்தம் வரை சென்று, அங்கு யு திருப்பம் திரும்பி, மீண்டும் 700 மீட்டர் எதிர்புறமாக பயணித்து,நேராக கிழக்கு கடற்கரைச்சாலையில் கேளம்பாக்கம் நோக்கியோ அல்லது இடபுபுறம் திரும்பி கிழக்கு கடற்கரைச் சாலைக்கோ, மீண்டும் செம்மொழி சாலைக்கோ செல்ல வேண்டும்.
இதில் பிரச்சினை என்னவென்றால், பழைய மாமல்லபரம் சாலையிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதுதான். இதற்காக சாலையின் ஒரு பகுதி தடுக்கப்பட்டுள்ளது. மேடவாக்கம் பகுதியில் இருந்துவரும் வாகனங்கள், கேளம்பாக்கத்தில் இருந்து துரைப்பாக்கம், பெருங்குடி நோக்கி செல்லும் வாகனங்கள் என ஒரே நேரத்தில் அப்பகுதிக்கு வருவதால் டாலர் கபே பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள சந்திப்பை கடந்து செல்ல குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது ஆகும். ‘ பீக் ஹவர்’களில் நிலைமை மேலும் மோசமாகும்.
அடுத்தது, கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து செம்மொழிச்சாலை அல்லது துரைப்பாக்கம், பெருங்குடி நோக்கி பழைய மாமல்லபுரம் சாலையில் செல்ல வேண்டும் என்றால், சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து நேராகவோ, வலதுபுறம் திரும்பியோ செல்ல இயலாது. இடதுபுறம் திரும்பி கேளம்பாக்கம் நோக்கி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 1 கிமீ வரைபயணித்து, சோழிங்கநல்லூர் பால்பண்ணைக்கு அடுத்து வரும் சந்திப்பில் வலதுபுறம் ‘யு திருப்பம்’ எடுத்து அதே ஒரு கிமீவரை பயணித்து நேராக துரைப்பாக்கம் நோக்கியோ, இடதுபுறம் திரும்பி செம்மொழிச்சாலையில் செல்ல வேண்டும்.
இந்த பிரச்சினைகளால் இப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வருவோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். சிரமத்தை குறைக்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய வேண்டும் அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் கார்த்திக்: தரமணியில் பணியாற்றி வருகிறேன். தினசரி இந்த சாலையில் தான் செல்ல வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் மேடவாக்கம், பள்ளிக்கரணை வழியாக செல்ல வேண்டும். அனைத்து கேளம்பாக்கம் செல்லும் வாகனங்களையும் இப்பகுதியில் திருப்பி விட்டுள்ளதாலும், மெட்ரோ பணிகள் நடைபெறுவதாலும் நேரத்துக்கு பணிக்கு செல்ல முடிவதில்லை. இப்பகுதியில் போக்குவரத்தை மாற்றி அமைக்க வேண்டும். மேம்பாலம் கட்டினால் நல்லது.
பெரும்பாக்கம் நேசமணி நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் என்.கே.ராஜா: சோழிங்கநல்லூர் சந்திப்பில் சாலையை கடப்பதற்கு வெகுதூரம் சுற்றி வரவேண்டியுள்ளது. இது அனைவருக்கும் சிரமம். எனவே இப்பகுதியில் ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டியது கட்டாயம். செம்மொழி சாலையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை நோக்கி செல்லும் சாலைக்கோ அல்லது பழைய மாமல்லபுரம் சாலையில் இந்த சந்திப்பை கடக்கும் வகையிலோ மேம்பாலம் அமைக்கலாம். அவ்வாறு அமைத்தால் வாகனங்கள் விரைவாக செல்ல முடியும்.
மேடவாக்கத்தைச் சேர்ந்த வங்கி ஊழியர் மாளவிகா: கிழக்கு கடற்கரைச் சாலை செல்ல வேண்டும். இதற்காக மேடவாக்கத்தில் இருந்து ஷேர் ஆட்டோ மூலம், கோழிங்கநல்லூர் சந்திப்பு சென்று, அங்கு சாலையை நடந்து கடந்து, அதன்பின், அங்கிருந்து ஆட்டோ அல்லது வேறு வாகனங்களில் கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. சாலையில் போக்குவரத்து மாற்றம் இருப்பதாலும், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதாலும், ஆட்டோ ஓட்டுநர்கள் கிழக்கு கடற்கரை சாலை செல்ல கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். எனவே, போக்குவரத்தை வழக்கமான முறையில் மாற்றியமைத்தால் நல்லது.
அதிகாரிகள் சொல்வதென்ன? - இந்நிலையில், இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சோழிங்கநல்லூர் சந்திப்பில் வெகுதூரம் சென்று திரும்புவது சிரமம்தான். இங்கு மெட்ரோ ரயில் பணிகளும் நடைபெறுகின்றன. இந்த பகுதியில் வாகன அடர்த்தி அதிகளவில் இருப்பதால், அதை கருதியே இந்த மாற்றத்தை செய்துள்ளோம். மீண்டும் வழக்கமான முறையில் மாற்றினால், நீண்ட நேரம் வாகனங்கள் நின்று செல்லும் நிலை ஏற்படும். சோதனை அடிப்படையில் போக்குவரத்தை சீரமைக்க மாற்று வழிகளை ஏற்படுத்திய போதும் அது பலனளிக்கவில்லை. போக்குவரத்து பிரச்சினை தீர்க்க முடியாத காரணத்தால் இந்த முறையை அமல்படுத்தியுள்ளோம். இந்த பகுதியில் சென்னை பாடியில் உள்ளதைப்போல் மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்துள்ளது. மெட்ரோ ரயில் மற்றும் நெடுஞ்சாலை மேம்பாலப்பணிகள் முடியயும் வரை இந்த மாற்றம் அமலில் இருக்கும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT