Published : 24 Jun 2023 11:57 AM
Last Updated : 24 Jun 2023 11:57 AM

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளும், முடிவுறாத பிரச்சினைகளும் @ திருப்பூர்

கோப்புப் படம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 24 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும்என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழகத்தில் தொழிலாளர்கள் நிறைந்த தொழில் மாவட்டம் திருப்பூர். நாட்டின் அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களும் தொழிலாளர்களாக பணிபுரிவதுதான் திருப்பூரின் சிறப்பு.

அதேபோல, தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும், ஏதாவது ஒருவகையில் பின்னலாடை தொழிலை நம்பி, இங்கு வந்து தொழில் செய்து வருகின்றனர். அதன்பின்னர் அந்த தொழிலில் வளர்ச்சியடைந்து, இன்றைக்கு பல தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் நிறுவனங்களை சொந்தமாக நடத்தி வருவதுதான் திருப்பூரின் உன்னதங்களுள் ஒன்று.

தொழிலாளர்கள் அதிகளவில் வசிப்ப தால் கஞ்சா, புகையிலை என தடை செய்யப்பட்ட பொருட்களின் வியாபாரமும் அதிகளவில் இருக்கும். அதே நேரத்தில், டாஸ்மாக் வியாபாரமும் அதிகளவில் கொடிகட்டி பறக்கும் மாநகரங்களில் திருப்பூரும் ஒன்று. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல மடங்கு வியாபாரம் டாஸ்மாக் கடைகளில் நடக்கும்.

அதேபோல, குடிபோதையில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறும் நகரமாகவும் திருப்பூர் இருந்து வருகிறது. வார இறுதி நாட்களில் குற்றச்செயல்கள் அதிகரிப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில், திருப்பூர் மாநகரில் 14 டாஸ்மாக் கடைகள், புறநகரில் 10 கடைகள் என மொத்தம் 24 கடைகள் தற்போது மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. முதலிபாளையத்தில் நடந்த போராட்டத்தின் ஒருபகுதியாக, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுபானக்கூடம் சூறையாடப்பட்டது. வாரந்தோறும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மனுஅளிப்பது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.

திருப்பூர் புஷ்பா திரையரங்க வளைவில் தேவாங்காபுரம் பள்ளி சுவரை ஒட்டி, சுமார் 70 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. மதுபானக்கூடமும் முறைகேடாக செயல்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்படுகின்றனர். கோயில் அருகிலேயே டாஸ்மாக் கடை உள்ளது. ஆனால், அந்த கடை மூடப்படவில்லை. இவையெல்லாம் உடனடியாக மூடியிருக்கப்பட வேண்டும்.

இதுதொடர்பாக இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கணேசன் கூறும்போது, “எங்கள் பகுதி பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி, டாஸ்மாக்கடையை மூட வலியுறுத்தி பல ஆண்டுகளாக கிராம சபைக்கூட்டங்களில் தீர்மானம்நிறைவேற்றுகிறோம். ஆனால், எங்கள் எதிர்ப்பில் உள்ள டாஸ்மாக் கடையை மூடவில்லை. இதன்மூலமாக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கவில்லை" என்றார்.

மங்கலம் ஊராட்சி முன்னாள் தலைவர் வே.முத்துராமலிங்கம் கூறும்போது, “டாஸ்மாக் கடைகள் மக்களுக்கு இடையூறாக இருப்பது, திருப்பூரில் ஒரு சமூகபிரச்சினையாகவே மாறியுள்ளது.

இதுதொடர்பாக அரசு சிறப்பு கவனம்செலுத்தி, மக்களுக்கு இடையூறாகஇருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுவதுதான் பயன் தரும். இதேபோல, மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் செயல்படும் இடத்தை கவனத்தில் கொண்டு மூடியிருக்க வேண்டும்” என்றார்.

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சுப்பிரமணியன் கூறும்போது, “ஒரே இடத்தில் 2 கடைகள் இருந்தால், அதில் ஒரு கடையை மூடியுள்ளோம். அதேபோல், பல்வேறு கிராமங்களில் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் போட்டுள்ளனர். அதில், தகுதி உள்ளவைகளை மட்டும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும். திருப்பூர் புஷ்பா திரையரங்க வளைவு அருகே தேவாங்கபுரம் நடுநிலைப் பள்ளி அருகே வேறு டாஸ்மாக் கடைகள் இல்லாத தால், அங்கு அந்த டாஸ்மாக் கடை செயல்படுகிறது" என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x