Published : 24 Jun 2023 05:39 AM
Last Updated : 24 Jun 2023 05:39 AM

மாவட்டத்துக்கு ஒரு ‘நடைப்பயிற்சி பாதை’ - மக்களின் கவனம் ஈர்க்கும் ‘ஹெல்த் வாக்’ திட்டம்

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் நேற்று அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா மற்றும் அதிகாரிகள்.

மதுரை: மாவட்டத்துக்கு ஒரு நடைப்பயிற்சி பாதை என்ற அடிப்படையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் ‘ஹெல்த் வாக்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கரோனாவுக்குப் பின்னர் நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றில் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், நகர்ப்புறங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள இடம் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு சுகாதார விழிப்புணர்வுத் திட்டமாக ‘ஹெல்த் வாக்’ திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இதில், மாவட்டந்தோறும் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு நடைபாதை என்ற அடிப்படையில், 38 மாவட்டங்களில் நடைப்பயிற்சி பாதைகள் அமைய உள்ளன.

இவற்றில், குடிநீர், இருக்கை வசதிகளுடன், மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் மருத்துவ முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதி உள்ளாட்சி நிர்வாகங்கள் நடைபாதையைப் பராமரிக்கும். மதுரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்கப்பட உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையை, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டார்.

தொடர்ந்து, அமைச்சர் மூர்த்தி, மேயர் இந்திராணி, ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோருடன் அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டார். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மாவட்ட நிர்வாகம், பொது சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து சுகாதார நடைபாதைக்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.

மதுரையில் சுகாதார நடைபாதை அமைக்க ரேஸ்கோர்ஸ் சுற்றுச் சாலை தேர்வு செய்யப்படும். இங்கு சிமென்ட் கற்கள் பதித்து, நடப்பதற்குரிய தனிப் பாதையாக அமைக்கப்படும். இருபுறமும் மரக்கன்றுகள் நடப்படும். இந்த நடைபாதை வழியில் வாகனப் போக்குவரத்து அதிகம் இல்லாமலும், குப்பையின்றியும் பராமரிக்கப்படும்.

மேலும், எத்தனை கி.மீ. நடைப்பயிற்சி மேற்கொண்டோம் என்பதை அறியும் வகையில், ஒவ்வொரு கி.மீ. தூரத்தைக் குறிக்கும் பலகைகள் நிரந்தரமாக நிறுவப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x