Published : 24 Jun 2023 05:19 AM
Last Updated : 24 Jun 2023 05:19 AM
திருவாரூர்: திருவாரூர் அருகேயுள்ள காட்டூரில் 7,000 சதுர அடி பரப்பில், ரூ.12 கோடியில் கலைஞர் கோட்டம் என்ற பெயரில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20-ம் தேதி பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இங்கு இத்தாலி பளிங்கு கற்களால் 16 அடி உயர கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அருகில், கருணாநிதியின் இளமைக்காலம், திரை வாழ்வு, அரசியல் பொதுவாழ்வு போன்றவற்றை தொடுதிரையில் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நவீனத் தொழில்நுட்பத்தில் கருணாநிதியுடன் சேர்ந்து இருப்பதுபோல புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கருணாநிதியின் வரலாற்றை காட்சிப்படுத்தும் வகையில் நவீன அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது தந்தை முத்துவேலர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தில், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. கலைஞர் கோட்டத்தை பொதுமக்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை
7 மணி வரையிலும் பார்வையிடலாம். தினமும் ஏராளமானோர் இதை வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
முதல் நாள் 890 பேர், 2-வது நாள் 810 பேர், 3-வது நாளான நேற்று 650 பேர் இங்கு வந்துள்ளனர். நுழைவுக் கட்டணமாக ரூ.20-ம், கருணாநிதியுடன் சேர்ந்து இருப்பது
போல புகைப்படம் எடுத்துக் கொள்ள ரூ.20-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கலைஞர் கோட்டத்தை பிரம்மாண்டமான வகையில் வடிவமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு. திறப்பு விழாவில் அவரைப் பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்.
இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு கூறும்போது, “தலைவர் மு.க.ஸ்டாலினின் சிந்தனையில் உருவான கலைஞர் கோட்டம், தற்போது பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்தக் கோட்டம் கருவாக உருவாகி, கட்டிடமாக உயர்ந்து நிற்பது வரையில், தலைவரின் எண்ணங்களைத்தான் நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம். அவரது எண்ணத்தை முழுமையாக ஈடேற்றிவிட்டோம் என்ற மனநிறைவுதான் எங்களுக்கு கிடைத்த சந்தோஷம்” என்றார்.
இந்தக் கோட்டத்தை உருவாக்க அமைச்சர் எ.வ.வேலுவுக்கு, திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன், அறக்கட்டளை அறங்காவலர் மோகன் காமேஸ்வரன் ஆகியோர் உறுதுணையாக இருந்துள்ளனர்.
இலவச அனுமதி வேண்டும்: கலைஞர் கோட்டத்தைப் பார்வையிட வந்த ஆசிரியர் க.தங்கபாபு கூறும்போது, “இது மிகவும் நேர்த்தியாகவும், வியக்கத்தக்க வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒருமுறை வந்து சென்றால், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். எனினும், பார்வையாளர்களுக்கு கட்டணம் வசூலிப்பதைக் கைவிட்டு, இலவசமாக அனுமதிக்க வேண்டும். கலைஞர் கோட்டம் குறித்த வழிகாட்டுப் பிரதியை வழங்கினால் சிறப்பாக இருக்கும்” என்றார்.
கலைஞர் கோட்டம் குறித்து எம்எல்ஏ பூண்டி கலைவாணன் கூறும்போது, “கலைஞர் கோட்டத்தை இலவசமாகவே பார்வையிட முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, அவர்களை வரிசைப்படுத்தி அனுப்புவதில் சிரமம் ஏற்படும் என்பதால், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment