Published : 24 Jun 2023 05:12 AM
Last Updated : 24 Jun 2023 05:12 AM
சென்னை: இந்த ஆண்டின் குழந்தை இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் உதயசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எழுதிய ‘ஆதனின் பொம்மை' என்ற நாவலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
கோவில்பட்டியில் பிறந்தவரான உதயசங்கர், தமிழகத்தின் நிகழ்கால குழந்தை இலக்கிய எழுத்தாளர்களில் மிகவும் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார்.
இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் சிறப்பாக எழுதி வரும் 35 வயதுக்குட்பட்ட இளம் இந்திய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் ‘யுவ புரஸ்கார்’ விருது வழங்கப்படுகிறது. 2023-ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய ‘திருக்கார்த்தியல்’ என்ற சிறுகதைத் தொகுப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்தவரான ராம் தங்கம், முன்னணி நிறுவனங்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றி தற்போது முழுநேர எழுத்தாளராக எழுதி வருகிறார்.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர்களுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, செப்புப் பட்டயம் ஆகியவை கொண்ட விருது புதுடெல்லியில் பின்னர் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் வழங்கப்படும்.
ஆளுநர், முதல்வர் வாழ்த்து: ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ‘ஆதனின் பொம்மை’ தமிழ் நாவலுக்காக சாகித்ய அகாடமி பால புரஸ்காருக்கு தேர்வான உதயசங்கர் மற்றும் ‘திருக்கார்த்தியல்’ சிறுகதை தொகுப்புக்காக யுவ சாகித்யபுரஸ்காருக்கு தேர்வான ராம் தங்கத்துக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ‘ஆதனின் பொம்மை’ என்ற நாவலை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது பெற்றுள்ளார் எழுத்தாளர் உதயசங்கர். அதேபோல், இளமையில் பசி எனும் வலியை நாஞ்சில் நாட்டு மொழியில் மிக அழுத்தமான விவரிப்புகளால் பதிவு செய்த ‘திருக்கார்த்தியல்’ சிறுகதைத் தொகுப்புக்காக ‘யுவ சாகித்ய புரஸ்கார்’ விருது பெற்றுள்ளார் ராம் தங்கம். இருவருக்கும் தமிழக முதல்வர் என்ற முறையில் மனமார்ந்த பாராட்டு” என்று கூறியுள்ளார்.
இதேபோல் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT