Last Updated : 23 Jun, 2023 11:57 PM

 

Published : 23 Jun 2023 11:57 PM
Last Updated : 23 Jun 2023 11:57 PM

வியாபாரிகள் வராததால் களையிழந்த ஒட்டன்சத்திரம் குதிரை, மாட்டுச்சந்தை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே எஸ்.அத்திகோம்பையில் நடந்த குதிரை, மாட்டுச்சந்தைக்கு வியாபாரிகள், விவசாயிகள் வராததால் களை இழந்து காணப்பட்டது. எனினும், சந்தையில் அதிகபட்சமாக காங்கேயம் காளை மாடு ரூ.1 லட்சத்துக்கும், நாட்டு குதிரை ரூ.50,000-க்கும் விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே எஸ்.அத்திகோம்பையில் ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோயில் திருவிழா ஜூன் 20-ம் தேதி தொடங்கி ஜூன் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் குதிரை மற்றும் மாட்டுத்தாவணி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, 127-வது ஆண்டாக குதிரை மற்றும் மாட்டுச் சந்தை நடந்து வருகிறது. திண்டுக்கல் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் காங்கேயம் காளைகள், ஜல்லிக்கட்டு காளைகள், நாட்டு பசு மாடுகள், நாட்டு குதிரைகள், ரேஸ் குதிரைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதே போல், மாடு மற்றும் குதிரையை கட்டுவதற்கு தேவையான கயிறுகள், மணிகள், சங்கு, சலங்கை, சாட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக, 2,000 மாடுகள், குதிரைகள் வரை விற்பனைக்கு வரும் நிலையில், இந்தாண்டு 500-க்கும் குறைவான மாடுகளும், 50-க்கும் குறைவான குதிரைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. வெளியூர்களில் இருந்து மாடு, குதிரைகளை வாங்குவதற்கு வியாபாரிகள், விவசாயிகள் வராதததால் இந்தாண்டு சந்தை களையிழந்து காணப்பட்டது. இருப்பினும் அதிகபட்சமாக காங்யேம் காளை மற்றும் பசு மாடு ரூ.1 லட்சம் வரையும், நாட்டு குதிரை ரூ.50,000 வரை விற்பனையானது.

இது குறித்து வேடசந்தூரைச் சேர்ந்த மாடு வியாபாரி குமார் கூறியதாவது: "ஒரு காலத்தில் மாட்டு சந்தை என்றால் கூட்டம் களைக்கட்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சந்தைக்கு இருந்த மவுசு குறைந்துவிட்டது. இந்தாண்டு சந்தை தொடங்கி 3 நாட்களாகியும் எதிர்பார்த்த விற்பனை இல்லை. சிலர் உள்ளூரிலேயே மாடுகளை விற்பனை செய்வதால், சந்தைக்கு வியாபாரிகள், விவசாயிகள் வருவது குறைந்து வருகிறது. அதனால் இந்தாண்டு விற்பனை குறைவது தான்" என்றார்.

கயிறு, மணி விற்பனை செய்யும் எடப்பாடியை சேர்ந்த வியாபாரி சந்தோஷ்குமார் கூறியதாவது: "எனது தந்தை காலத்தில் இருந்தே மாட்டு சந்தை நடக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று தங்கியிருந்து மாடுகளுக்கு தேவையான கயிறுகள், சலங்கை, மணி, சங்கு உள்ளிட்டவை விற்பனை செய்து வருகிறோம். இந்தாண்டு ரூ.10,000 செலவு செய்து பொருட்களை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு விற்பனைக்கு வந்தோம். வாகனத்திற்கு செலவு செய்த பணத்திற்கு கூட விற்பனையாகவில்லை. விவசாயிகள் வராததால் விற்பனை மந்தமாக உள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x