Last Updated : 23 Jun, 2023 03:02 PM

 

Published : 23 Jun 2023 03:02 PM
Last Updated : 23 Jun 2023 03:02 PM

மது குடிக்க... மாடு தூங்க... ஒரு பேருந்து நிலையம்: நடவடிக்கை எடுக்குமா கும்மிடிப்பூண்டி பேரூராட்சி?

மேற்கூரை இல்லாததால்,ஷேர் ஆட்டோ, வேன் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்ட கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பேருந்து நிலையம்.

கும்மிடிப்பூண்டி: மேற்கூரை இல்லாததால், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பேருந்து நிலையம் ஷேர் ஆட்டோ, வேன் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டதால், பயணிகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் ஒன்று, கும்மிடிப்பூண்டி. ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள இந்த நகரம், வட்டத் தலைநகராகவும், தமிழகத்தின் 3-வது சிறுதொழில் வளர்ச்சி நகரமாகவும் விளங்குகிறது. கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள 61 ஊராட்சிகள் அடங்கிய 85-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர், மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள், பள்ளி, கல்லூரிகள், பணியிடங்கள் உள்ளிட்டவற்றுக்காக இந்த நகருக்கு வந்து செல்கின்றனர்.

அதுமட்டுமின்றி, சென்னை, பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் வந்து செல்கின்றனர். இப்படி, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் கும்மிடிப்பூண்டி- ஜிஎன்டி சாலையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.

தினமும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வரும் இந்த பேருந்து நிலையத்தின் கூரை, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் சி.எச்.சேகரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டது. அந்த கூரையை தாங்கி நின்ற இரும்பு தூண்களில் ஒன்று, கடந்த 2016-ம் ஆண்டு வீசிய ‘வார்தா’ புயலின்போது சேதமடைந்தது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் பேருந்து நிலையத்தின் மேற்கூரை முழுமையாக அகற்றப்பட்டது. அதன் பிறகு, சிறிய அளவிலான பந்தல் மட்டும் போடப்பட்டது. மேற்கூரை இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் நோயாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர்.

மேற்கூரை இல்லாததால், ஷேர் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், வேன்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவே கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் மாறிவிட்டது. இதனால், பேருந்துகள் எளிதாக பேருந்து நிலையத்தின் உள்ளே செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. வேறு வழியின்றி, பல பேருந்துகள் சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

நெல்லூர், நாயுடுபேட்டை, காளஹஸ்தி உள்ளிட்ட ஆந்திர பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், நகருக்குள்ளேயே வராமல், சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையிலேயே சென்றுவிடுவதற்கு இதுவும் ஒரு காரணம். தவிர, இந்த பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் வசதி இல்லை. கட்டண கழிவறையும் முறையான பராமரிப்பு இல்லாமல், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை ஆகியவை எந்நேரமும் பூட்டியே கிடக்கின்றன என்று பயணிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் ராஜேந்திரன் கூறும்போது, ‘‘நாள்தோறும் சுமார் 40 பேருந்துகள் வந்து செல்லும் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் மேற்கூரை இல்லாததால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பயணிகள் வெயிலிலும், மழையிலும் சிக்கி அவதிப்படுகின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது சிரமமாக உள்ளது’’ என்றார்.

சமூக ஆர்வலர் கார்த்திக் கூறியபோது, ‘‘சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம், தொடர்ந்து நடந்த ஆக்கிரமிப்புகளால் ஒரு ஏக்கராக சுருங்கிவிட்டது. இதுதவிர, பேருந்து நிலையத்தில் உள்ள பேரூராட்சி வணிக வளாகங்களில் கடை வைத்திருப்பவர்களும் எஞ்சியுள்ள பகுதியை ஆக்கிரமித்து, பேருந்துகள், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் பேருந்து நிலைய வளாகம், மது அருந்தும் இடமாகவும் மாடுகள் தூங்கும் இடமாகவும் உள்ளது’’ என்றார்.

வழக்கறிஞர் சுரேஷ் கூறும்போது, '’நாள்தோறும் சென்னை, செங்குன்றம், பொன்னேரி மற்றும் சத்தியவேடு உள்ளிட்ட ஆந்திர பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்லும் கும்மிடிப்பூண்டி நகரில் உள்ள பேருந்து நிலையம், மேற்கூரை இல்லாமல் இருப்பதால், தனியார் வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. முறையான பராமரிப்பும் இல்லாததால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இனியாவது, மேற்கூரை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து, பேருந்து நிலையத்தை பேரூராட்சி நிர்வாகம் மேம்படுத்த வேண்டும்’’ என்றார்.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகள் துணை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் கூறியபோது, ‘‘கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைப்பது தொடர்பாகவும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x