Published : 23 Jun 2023 05:54 PM
Last Updated : 23 Jun 2023 05:54 PM
புதுச்சேரி: புதுச்சேரி புதிய சட்டப்பேரவை கட்டிடம் 15 ஏக்கரில் நவீன தொழில்நுட்பத்துடன் கட்ட உள்ளதாகவும், அதற்கு ஜூலை 15-க்குள் ஒப்பந்தம் கோரப்படும் என்றும் பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தின் புதிய சட்டப்பேரவை வளாகம் தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் கட்டப்பட உள்ளது. மத்திய அரசின் நிதி ரூ.440 கோடியில் தலைமை செயலகத்துடன் இணைந்த புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் அமைய உள்ளது. இதற்காக கட்டிட வடிவமைப்பை டெல்லியை சேர்ந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கெனவே 2 முறை கட்டிடத்தின் வரைபடத்தை நிறுவனத்தின் அதிகாரிகள் புதுச்சேரி வந்து முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர், அமைச்சர்களிடம் விளக்கினர். இதில் சில மாற்றங்களை செய்ய முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இப்போது மீண்டும் வரைபடத்தை படக்காட்சியின் மூலம் விளக்கினர். அப்போதும் சில திருத்தங்களை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அதன்பேரில் முதல்வர் கூறிய திருத்தங்களை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதிய சட்டப்பேரவை கட்டிடம் தட்டாஞ்சாவடி பகுதியில் 15 ஏக்கரில் அமையவுள்ளது. இதற்கான மாதிரி வரைபட இறுதி அறிக்கையானது வரும் 30-ம் தேதி அரசுக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. புதிய சட்டப்பேரவை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வளாகமாக அமையும். தலைமை செயலகத்துடன் ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்ட மத்திய அரசிடம் ஏற்கெனவே ரூ.440 கோடி வழங்க கோரப்பட்டுள்ளது. புதிய சட்டப்பேரவை வளாகத்தில் ஆயிரம் பேர் அமரும் வகையில் அரங்கம் அமைக்கப்படும்.
சட்டப்பேரவை மைய கூட்ட அரங்கில் 60 எம்எல்ஏக்கள் அமரும் வகையில் அமைக்கப்படும். தலைமைச் செயலகத்தையும், சட்டப்பேரவையையும் இணைக்கும் வகையில் முதல்மாடி இணைக்கப்படும். சட்டப்பேரவை கட்டிடம் 6 மாடி, தலைமை செயலகம் 5 மாடி கொண்டதாக அமைக்கப்படும். ஒருங்கிணைந்த வளாகத்தில் ஹெலிபேடு தளமும் அமைக்கப்படும். புதிய சட்டப்பேரவை மின்னணு முறையில் பதிவு செய்யும் வகையில் காகிதமில்லா சட்டப்பேரவையாகவும் இருக்கும். தற்போது கட்டிட வளாகத்தில் புதிதாக செலவாகும் நிதியையும் சேர்த்து கருத்துரு தயாரிக்கப்படவுள்ளது.
புதிய கருத்துரு அடிப்படையில் நிதி கோரி துணை நிலை ஆளுநர் அனுமதி பெறப்படும். அதன்பின்னர் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்படும். மத்திய அரசு அனுமதியுடன் வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் புதிய சட்டப்பேரவைக் கட்டிடத்துக்கான ஒப்பந்தம் கோரப்படும். டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை புதுச்சேரி எம்எல்ஏக்கள் சென்று பார்ப்பதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் எம்எல்ஏக்கள் டெல்லி செல்லவுள்ளனர்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT