Last Updated : 23 Jun, 2023 04:40 PM

1  

Published : 23 Jun 2023 04:40 PM
Last Updated : 23 Jun 2023 04:40 PM

அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் பாஜகவை தோற்கடிக்க முடியாது: மதுரையில் சுதாகர் ரெட்டி பேட்டி

மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க குறிப்புகளை மதுரையில் வீடு வீடாக வழங்கி ஆதரவு திரட்டினார் பாஜக தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ரெட்டி

மதுரை: அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் பாஜகவை தோற்கடிக்க முடியாது என பாஜக இணை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.

மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் கிருஷ்ணபுரம் காலனியில் மக்கள் தொடர்பு பேரியக்கம் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ரெட்டி பங்கேற்றார். அவர் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைத் திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இந்தத் திட்டங்களால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தால் பல லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் மிகவும் பின்தங்கி இருந்த அனைத்து துறைகளும் பிரதமர் மோடி ஆட்சியில் முன்னேறியுள்ளது. உலக நாடுகள் மோடி ஆட்சியை பாராட்டியுள்ளன. பிரதமர் மோடி காசி தமிழ்ச் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ் மன்னர்களின் அடையாளமான செங்கோலை வைத்து தமிழகத்துக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. நாட்டிலுள்ள அனைத்து எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் பாஜகவை தோற்கடிக்க முடியாது. வீழ்த்த முடியாது. திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகளால் எந்த ஊழல் குற்றச்சாட்டும் கூற முடியாது. நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்று மோடி தலைமையில் மீண்டும் பாஜக அரசு அமையும்” என்றார்.

இந்நிகழ்வுக்கு மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் பாஸ்கர், மண்டல் தலைவர் மாணிக்கம் வரவேற்றார். மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x