Published : 23 Jun 2023 12:46 PM
Last Updated : 23 Jun 2023 12:46 PM
சென்னை: வள்ளலார் குறித்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கருத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் சமூக, பொருளாதார, பண்பாட்டு வரலாற்றைப் பற்றி தவறான கருத்துக்களை தொடர்ந்து கூறிவரும் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி, தற்போது ஒன்றை உளறிக் கொட்டியுள்ளார். தமிழகத்தில் சாதிய சனாதன சமூக கட்டமைப்பை உடைக்கவும், அதன் கருத்தியலை தாக்கி அழிக்கவும் ஒலித்த முதன்மைக்குரல் “வள்ளலார்” குரல் ஆகும்.
“சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட் பெரும் சோதி, என்றும் சாதியும், மதமும் சமயமும் வேண்டேன் சாத்திரக் குப்பையும் வேண்டேன்” எனவும் “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” எனவும் முழங்கியவர்.
“அருட் பெருஞ் சோதி, தனிப்பெருங் கருணை” என தமிழகத்தில் ஆன்மிகத்தில் சாதி, மத பேதமின்றி அனைவரையும் உள்ளடக்கிய புதிய தடம் பதித்தவர். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என அனைத்துயிர்களின் சமத்துவம் பேசியவர். இத்தனை சிறப்புக் கொண்ட வள்ளலாரை “பார்ப்பனிய, சாதியத்தை உயர்த்தி பிடிக்கும் சனாதனத்தின் உச்சம்” என தமிழக ஆளுனர் கூறியதை என்னவென்று சொல்வது? திட்டமிட்டு இப்படி பொய்யுரைகளை பரப்பும் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது." என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT