Published : 06 Jul 2014 09:00 AM
Last Updated : 06 Jul 2014 09:00 AM
வேலையில்லா பட்டதாரி படத்தின் பெயரை மாற்றவும், படத்தில் புகைப்பிடிக்கும் மற்றும் ஆபாசக் காட்சிகளை நீக்கவும் உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி. முத்துப்பாண்டி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:
சென்னையில் ‘வேலையில்லா பட்டதாரி’படத்தின் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதில், படத்தின் கதாநாயகன் சிகரெட்டை வாயில் வைத்திருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. ஆனால், புகைப்பிடிப்பது தொடர்பாக எந்த எச்சரிக்கை வாசகமும் விளம்பரத்தில் இல்லை. 2007-ம் ஆண்டு முதல் பொது இடங்களில் புகைப்பிடிப்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு முதல் திரைப்படங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், சின்னத்திரை தொடர்களில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வந்தால், அந்தக் காட்சியின் கீழ் எச்சரிக்கை வாசகம் இடம் பெற செய்ய வேண்டும்.
ஆனால், இந்தப் படத்தின் விளம்பரத்தில் எச்சரிக்கை வாசகம் இல்லை. எனவே, படத்தில் புகைப்பிடிக்கும் காட்சியோ அல்லது ஆபாசக் காட்சிகளோ இல்லாமலும், இளைஞர்கள், பொதுமக்களுக்கு மனஉலைச்சல் ஏற்படாமல் இருக்க படத்தின் பெயரை மாற்றவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி. ராமசுப்பிரமணியன், வி.எம். வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தெரிவித்துள்ள பிரச்சினையை மத்திய தணிக்கை பிரிவு மற்றும் அது தொடர்பான அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். மனுதாரர் படத்தை பார்க்கவில்லை. படத்தை பார்க்காமலேயே ஆட்சேபம் தெரிவிக்கிறார். ஏற்கெனவே, ‘ஒரே ஒரு கிராமத்தில்’படத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, மனுதாரரின் கோரிக்கைக்கு நிவாரணம் அளிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT