Published : 23 Jun 2023 05:11 AM
Last Updated : 23 Jun 2023 05:11 AM

தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடல்: மதிமுக, தமாகா, மநீம வரவேற்பு

சென்னை: தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதற்கு அரசியல்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து அக்கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: 500 மதுக்கடைகள் மூடப்பட்டது வரவேற்கத்தக்கது. தமிழக அரசு படிப்படியாக மதுக்கடைகளை மூடி, மது இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால்தான் தமிழக அரசு தற்போது 500 மதுக்கடைகளை மூடுகிறது. குறுகிய காலத்துக்குள் மதுக்கடைகள் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: அரசின் நடவடிக்கை, பரிபூரண மதுவிலக்கு அமலாக்கப்படும் என்னும் நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கிறது. மூடப்பட்ட மதுக்கடையில் வேலை செய்தவர்களுக்கு அரசின் பிற துறைகளில் நியமனம் வழங்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யம்: மதுக்கடைகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை, நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதைப் பாராட்டுகிறோம். பள்ளி, கோயில் அருகே உள்ள மதுக்கடைகள் அகற்றப்படுவதோடு, தாலுகாதோறும் போதை மீட்பு மற்றும் மது நோயாளிகள் மறுவாழ்வு மையங்களை அரசு சார்பில் அமைக்க வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: 2026-ம் ஆண்டுக்குள் முழு மதுவிலக்கு என்ற இலக்கை நோக்கி முன்னேற வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா: பள்ளி, ஆன்மிகத் தலங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை மூடவும் தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x