Published : 23 Jun 2023 04:30 AM
Last Updated : 23 Jun 2023 04:30 AM

சென்னை, திருச்சி உள்ளிட்ட 6 கோட்டங்களில் பாதுகாப்பு மேம்பாடு - ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு

சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை உள்ளிட்ட 6 கோட்டங்களில் பாதுகாப்பு மேம்பாடு மற்றும் ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார்.

ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து, ரயில் தண்டவாளம், சிக்னல் உட்பட பாதுகாப்பு பிரிவில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஒவ்வோர் ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.

அதன்படி, தெற்கு ரயில்வேயில் ரயில்வே தண்டவாளம், சிக்னல் முறை, ரயில்வே பாலம் போன்றவற்றை ஆய்வு செய்வது, பராமரித்தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம் உள்ளிட்ட 6 ரயில் கோட்டங்களுக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆன்.என்.சிங் நேரில் சென்று ரயில்வே தண்டவாளம், சிக்னல், பாலங்கள் ஆகியவற்றை 2 நாட்கள் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வில், ரயில்களை பாதுகாப்பாக இயக்குவது, சீரான ரயில் சேவை, ஆய்வு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அதிகாரிகள், கடைநிலை பணியாளர்கள் என அனைவரிடமும் கருத்துகளை கேட்டறிந்தார்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்களைப் பாதுகாப்பாக இயக்குவது மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், பொறியியல் மெக்கானிக்கல், சிக்னல் தொழில்நுட்பங்கள் பிரிவு தலைமை அதிகாரிகள் ஆய்வுப் பணிகளை அதிகப்படுத்த வேண்டும். ரயில் சேவை மேம்பாடு குறித்து வழக்கமாக அதிகாரிகளிடம் மட்டுமே கருத்து கேட்கப்படும். ஆனால், தற்போது கடைநிலை பணியாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளன. சிறிய ஆலோசனைகளும், சீரான ரயில் சேவைக்கு பெரிதும் உதவும் என ரயில்வே விரும்புகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x