Published : 23 Jun 2023 04:27 AM
Last Updated : 23 Jun 2023 04:27 AM

குறுவை, சம்பா பயிர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் தேவையான உரம் இருப்பு உள்ளது - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் குறுவை, சம்பா பயிர்களுக்குத் தேவையான உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியதாவது: நடப்பு குறுவை மற்றும் சம்பா பருவத்துக்குத் தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு உள்ளது. மாநிலத்தின் உரத்தேவையில் 25 சதவீதம் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இதில், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையமும், இதர மாவட்டங்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையமும் (டென்பெட்) தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உரங்கள் வழங்கும் பணியை மேற்கொள்கின்றன. நடப்பு குறுவை பருவத்துக்குத் தேவையான உரங்கள் பல்வேறு உர நிறுவனங்களிடமிருந்து தருவிக்கப்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழை தொடங்கி உள்ளது. மேலும் நீர்த்தேக்கங்களிலிருந்து விவசாயப் பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 4,433 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் 34,224 டன் யூரியாவும், 23,300 டன் டிஏபி, 11,535 டன் பொட்டாஷ் மற்றும் 27,607 டன் காம்ப்ளக்ஸ் என 96,666 டன் உரங்கள் இருப்பாக உள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையக் கிடங்குகளில் 22,276 டன், கூட்டுறவு சங்கங்களில் 1,18,942 டன் உரம் இருப்பு உள்ளது. உரங்கள் பெறுவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தை 78457 65003 என்ற தொலைபேசி எண்ணிலும், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்தை 80981 79033 என்ற தொலைபேசி எண்ணிலும் விவசாயிகள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x