Published : 23 Jun 2023 04:15 AM
Last Updated : 23 Jun 2023 04:15 AM

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டம் | செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை - மனைவி தரப்பு வாதம்

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத் துறைக்கு காவல் துறைக்கான அதிகாரம் இல்லாதபோது, அந்த சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க எப்படி அனுமதி கோர முடியும் என்று உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் சட்டவிரோதமாக கைது செய்ததாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை கடந்த 15-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்ரவர்த்தி அமர்வு, செந்தில் பாலாஜியை அவரது குடும்பத்தினரின் விருப்பப்படி தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து, விசாரணையை ஜூன் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அமலாக்கத் துறையின் கோரிக்கையை நிராகரித்தும், இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை பொருத்து தங்கள் விசாரணை அமையும் என்று கூறியும் விசாரணையை ஜூலை 4-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்ரவர்த்தி அமர்வில் ஆட்கொணர்வு மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், அமலாக்கத் துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா காணொலி வாயிலாக ஆஜரானார். அதேபோல, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், அமலாக்கத் துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோரும் ஆஜராகி, தங்கள் தரப்பு வாதத்தை முதலில் கேட்க வேண்டும் என்று கோரினர்.

அதற்கு, செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆட்சேபம் தெரிவித்து, தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தார். அவர் தெரிவித்ததாவது: கைது செய்வதற்கான காரணங்களை செந்தில் பாலாஜிக்கு தெரிவிக்காதது அடிப்படை உரிமை மீறல். கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்பதால், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான். (உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார்.) அவரை நீதிமன்ற காவலில் வைக்க கீழமை நீதிமன்றமும் இயந்திரத்தனமாக உத்தரவிட்டுள்ளது.

உடல்நிலை காரணமாக அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்த அமலாக்கத் துறையினர், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை போலியானது என எப்படி கூற முடியும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கைது செய்யப்படும் ஒருவரை 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். அதன்பிறகு, சுனாமி, கரோனா என எந்த காரணமாக இருந்தாலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது.

தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். சிகிச்சையில் உள்ள காலகட்டத்தை நீதிமன்ற காவலில் உள்ளதாக கருதக் கூடாது என அமலாக்கத் துறை எப்படி கோர முடியும். தவிர, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத் துறையினருக்கு காவல் துறைக்கான அதிகாரம் தரப்படவில்லை. அப்படி இருக்க, அந்த சட்டத்தின்கீழ் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க எப்படி அனுமதி கோர முடியும். இவ்வாறு அவர் வாதிட்டார். இதையடுத்து, அமலாக்கத் துறை தரப்பு வாதத்துக்காக இந்த வழக்கை நீதிபதிகள் வரும் ஜூன் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x