Published : 22 Jun 2023 09:03 PM
Last Updated : 22 Jun 2023 09:03 PM
சென்னை: தாம்பரம் அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறி கட்டப்பட்ட குடியிருப்பு, அறை மற்றும் இரண்டு கூடுதல் அறைகளை சிஎம்டிஏ அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வெளியிட்டுள்ள தகவல்: தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பல்லாவரம் கிராமம், சுரேந்திரா ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் அனுமதிக்குப் புறம்பாக விதிகளை மீறி 4வது தளத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு எண் .409, மொட்டை மாடியில் உயர்நிலை நீர்தேக்க தொட்டியின் கீழ்கட்டப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டருக்கான அறை, வாகன நிறுத்தும் தளத்தில் அனுமதிக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் அறைகள் மற்றும் ஒரு கழிவறை ஆகியவை பூட்டப்பட்டு மூடி முத்திரையிடப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பல்லாவரம் கிராமம் கதவு எண்.1, பம்மல் பிரதான சாலை, பல்லாவரம், சென்னை-43 என்ற முகவரியில் 35 சமையலறைகள் கொண்ட வாகன நிறுத்து தளம் + 3 தளங்கள் + 4-வது தளம் (பகுதி) உடைய குடியிருப்பு கட்டிடம் மற்றும் தரைத்தளம் மட்டும் கொண்ட சங்க அறைக்கான கட்டிடம் ஆகியவற்றுக்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் கடித எண்.B1/18287/2006 திட்ட அனுமதி அனுமதி வழங்கியது.
சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் அனுமதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றி ஒப்புதல் பெற்ற வரைபடத்தின்படி கட்டிடத்தை திருத்தி அமைக்க கோரி 21.12.2012 அன்று கட்டிடத்தின் உரிமையாளரான எம்.எஸ்.ரமேஷ், சுரேந்திரா ஹோம்ஸ்க்கு ஷோகாஸ் நோட்டீஸ் (Show cause notice) வழங்கப்பட்டது. கட்டிட உரிமையாளர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினால் 02.06.2022 அன்று பூட்டுதல் மற்றும் மூடி முத்திரையிடுதலுக்கான தாக்கீது (Locking & Sealing and Demolition Notice) வழங்கப்பட்டது.
சுரேந்திரா ஹோம்ஸ் குடியிருப்பு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளர் ஜி.ஸ்ரீநிவாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு எண்.25615/2021-ல், சென்னை உயர்நீதிமன்றம் 09.11.2022 & 15.12.2022 ஆகிய தேதிகளில் பிறப்பித்த ஆணையில், விதிகளை மீறி 4-வது தளத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு எண்.409-ல் வசிப்பவர்களை காலி செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு அறிவுறுத்தியது.
சுரேந்திரா ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது தளத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு எண்.409-ல் வசிப்பவர்களுக்கு அதனை காலி செய்வதற்கான நோட்டீஸ் (De-occupation Notice) 09.12.2022 அன்று வழங்கப்பட்டது. மேற்கண்ட நோட்டீஸ் குறித்து உரிமையாளர் மற்றும் வசிப்பவரிடமிருந்து எந்த பதிலும் பெறப்படவில்லை.
எனவே, வியாழக்கிழமை (22.06.2023) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ராவின் உத்தரவின்படி, அமலாக்கப்பிரிவு அலுவலர்களால் காவல் துறை முன்னிலையில், தாம்பரம் மாநகராட்சி சுரேந்திரா ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் அனுமதிக்குப் புறம்பாக விதிகளை மீறி 4-வது தளத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு, மொட்டை மாடியில் உயர்நிலை நீர்தேக்க தொட்டியின் கீழ்கட்டப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டருக்கான அறை, வாகன நிறுத்தும் தளத்தில் அனுமதிக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் அறைகள் மற்றும் ஒரு கழிவறை ஆகியவை பூட்டப்பட்டு மூடி முத்திரையிடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT