Published : 22 Jun 2023 08:51 PM
Last Updated : 22 Jun 2023 08:51 PM
மேட்டூர்: தமிழகத்தில் 234 தொகுதிகள் இருந்தாலும் எடப்பாடி தொகுதிக்கு தனிப் பெருமை உண்டு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியம் சார்பில் செட்டிமாங்குறிச்சி, இருப்பாளி, பக்கநாடு, ஆடையூர், பூலாம்பட்டி, சித்துர், கள்ளுக்கடை பகுதிகளில் அதிமுக கொடியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "அதிமுக ஆட்சி காலம்தான் பொற்கால ஆட்சியாக இருந்தது. உங்களால்தான் சட்டமன்ற, நாடளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்றேன். தமிழகத்தின் முதல்வராக வருவதற்கு வாய்ப்பை நீங்கள்தான் உருவாக்கி கொடுத்தீர்கள்.
தமிழகத்தில் 234 தொகுதிகள் இருந்தாலும், எடப்பாடி தொகுதிக்கு தனிப் பெருமை உண்டு. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கைகழுவி விட்டனர். அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணி கொடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மடிக்கணி வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, திமுக ஆட்சி வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்ய முதல் கையெப்பம் போடப்படும் என்றார். ஆனால் இதுவரை நடக்கவில்லை. நான் முதல்வராக இருந்தபோது 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டம் இயற்றி நிறைவேற்றப்பட்டது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 41 சதவீதம் பேர் மருத்துவம் படிக்கின்றனர். தமிழகத்தில் 2017-18ம் ஆண்டில் 3,145 இடங்களில் 9 பேருக்குத்தான் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில், சேலத்தில் 2021-ம் ஆண்டு 74 பேரும், கடந்தாண்டில் 84 பேரும், நடப்பாண்டில் 100 பேரும் எம்பிபிஎஸ் படிக்க தேர்வு பெற்றுள்ளனர்.
அம்மா இரு சக்கர வாகனம், தாலிக்கு தங்கம் திட்டம் என ஏழை மக்களுக்கு கொண்டு வந்த திட்டத்தை படிப்படியாக நிறுத்திவிட்டனர். விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளிக்கும் துரோகம் செய்த அரசாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டது. தற்போது, பல பேருந்துகளின் இயக்கத்தை நிறுத்தியுள்ளனர்.
மின் கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப் பகுதியில் ஒரு சதுர அடிக்கு வீட்டு வரியாக, கான்கீரிட் வீடுகளுக்கு ரூ.1, கூரை வீட்டுக்கு 30 பைசா உயரத்தப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படும், சம்பளம் உயர்த்தப்படும் என தெரிவித்தனர், ஆனால், எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. நம்ம மக்கள் ஏமாறாமல் உஷாராக இருந்து, என்னை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். எதிர் வரிசையில் அமர்ந்து, எதிர்கட்சித் தலைவராக கேள்வி கேட்டால் பதில் இல்லை. திமுகவுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டது. போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறி விட்டது.
அதிகமான பள்ளிகளை அதிமுக அரசுதான் உருவாக்கியது. தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை திட்டத்தில் 5 லட்சம் பேருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு, 80 சதவீதம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தைக்கூட நிறுத்திவிட்டனர். மேட்டூர் அணையில் நிரம்பும் உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. வீணாக கலக்கும் நீரை, 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை கொண்டு வந்தேன். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு நிதி இல்லை மற்றும் பல்வேறு காரணங்களைக் கூறி நிறுத்தி விட்டனர். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு வறண்ட ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்வது நிறைவேற்றப்படும்" என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT