Published : 22 Jun 2023 06:22 PM
Last Updated : 22 Jun 2023 06:22 PM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 10,000 பொறியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம், 2022 மற்றும் விதிகள், 2023 தொடர்பான பயிலரங்கத்தை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், "தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998-க்கான (திருத்தம்), 2022 சட்டம் 11 பகுதிகளாகவும் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023, 13 பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளுக்கான அனைத்து வரன்முறைகளும் உள்ளடக்கியதாக வகுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் தமிழ்நாடு அரசிற்கு பெருமை சேர்க்கும் வகையிலும், பொதுமக்களின் பாராட்டுதல்களை பெறும் வகையில் இருக்க வேண்டும். அரசின் அனைத்து திட்டங்களும் சரியான வகையில் பொதுமக்களை சென்றடைய வேண்டும். நகராட்சி நிருவாகத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் இதற்காக எந்தவித சமரசமும் இல்லாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அலுவலர்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பினையும் நகராட்சி நிர்வாகத் துறை நிச்சயமாக வழங்கும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே இருக்க வேண்டும். இதற்காக உரிய சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை அனைவரும் சரியான புரிதலோடு செயல்படுத்த வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் அரசினுடைய நோக்கமும், திட்டங்களும் பொதுமக்களை சரியாக சென்றடையும். இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
இச்சட்ட விதிமுறைகள் கடந்த 10 மாதங்களாக தயாரிக்கப்பட்டு சட்டத் துறையின் அனுமதி பெற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கைகளை 3 மாத காலத்திற்குள் அரசிற்கு சமர்ப்பித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 10 ஆயிரம் பொறியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது" என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT