Published : 22 Jun 2023 05:51 PM
Last Updated : 22 Jun 2023 05:51 PM

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் செல்வாக்கு குறைந்து வருகிறது: ஆர்.பி.உதயகுமார் கருத்து

மதுரை: ''பிஹாரிலே கோ பேக் ஸ்டாலின் என்ற ட்ரெண்டிங் உருவானது போல் மிக விரைவிலே தமிழகத்திலும் கோ பேக் ஸ்டாலின் என்கிற ட்ரெண்டிங் வருவதற்கு காலம் வெகு தொலைவில் இல்லை'' என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று கூறியதாவது: ''பிஹார் செல்லும் முதல்வருக்கு, பிஹாரில் உள்ள சமூக வலைதளங்களில் கோ பேக் ஸ்டாலின் என்று ட்ரெண்டிங்காக உருவாகியுள்ளது. இன்றைக்கு அரசின் குளறுபடியால் நிர்வாகம் முடங்கியுள்ளது; அமலாக்கத் துறை விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது திமுக கூட்டணி கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள வைகோ, ஆளுநரை பதவி நீக்க செய்ய கையெழுத்து வாங்கி வருகிறார். நல்லகண்ணு, திருமாவளவன் ஆகியோர் கையெழுத்திட்டனர். அறிவாலயத்தில் ஸ்டாலினிடம் கையெழுத்து வாங்க வைகோ சென்றபொழுது பல்வேறு காரணம் காட்டி கையெழுத்திட மறுத்து விட்டார் ஸ்டாலின். கூட்டணி கட்சிகளிடம் பேசி எந்த முடிவும் எடுக்காததால் கூட்டணி கட்சிகள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு புறத்தில் தேசியத் தலைவர்களை அழைத்து வருவதிலும் ஸ்டாலினுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஏறத்தாழ 29 கட்சிகளுக்கு மேலே அங்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அதில் 19 கட்சிகள் மேடையில் இருந்தபொழுது ஸ்டாலினை பின்னுக்குத் தள்ளிவிட்டனர். இது தமிழகத்துக்கு ஏற்பட்ட தலைகுனிவாகும். அதனாலே ராகுல் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே கூட்டத்தை புறக்கணித்து சென்றுவிட்டார் ஸ்டாலின்.

தமிழகத்தில் முதல்வர் செல்வாக்கு குறைந்து கொண்டு வருகிறது. தமிழக மக்கள் முதல்வர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். கடந்த இரண்டு கால நிர்வாக சீர்கேட்டினால் அரசே முடங்கிப் போய் உள்ளது. சென்னை கிண்டி மருத்துவமனையில் ஐந்தாம் தேதி திறப்பு விழாவிற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 15-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், ஜனாதிபதி வரவில்ல. அப்படி என்றால் சரியாக ஜனாதிபதியை அணுகவில்லையா அல்லது முதல்வரின் நடவடிக்கைக்காக புறக்கணிப்பா? என்ன காரணம் என்பதுதான் தமிழக மக்களுடைய இன்றைய கேள்வியாக உள்ளது.

தன்னை தேசிய கட்சித் தலைவராக அவதாரமாக ஸ்டாலின் கருவதை தமிழ்நாடு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டணி கட்சிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. தேசியக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்டாலின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. முதல்வர்கள் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பார்கள். ஆனால், இன்றைக்கு பிஹாரில் தமிழக முதல்வருக்கு கோ பேக் ஸ்டாலின் என்று கூறிவருவது ஸ்டாலினால் தமிழகத்துக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது.

கூட்டணி கட்சியில் குழப்பம், நிர்வாக குளறுபடி, அமைச்சர் கைது... இந்தநிலையில் கூட தன்னையும், தனது தந்தையும், மகனையும் முன்னிலைப்படுத்துவதிலே கவனம் செலுத்துவதாலே தொடர்ந்து அவருக்கு பின்னடைவு ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களுடைய வளர்ச்சிக்கு அவர் எப்போது கவனம் செலுத்தப் போகிறார் என்பதுதான் தமிழக மக்களின் மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது'' என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x