Published : 22 Jun 2023 11:26 AM
Last Updated : 22 Jun 2023 11:26 AM

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது | இலங்கை கடற்படை அத்துமீறலுக்கு முடிவு கட்டுவது எப்போது?- ராமதாஸ் கேள்வி

சென்னை: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்குடன் இந்தியா - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி சாதகமான முடிவை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 22 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்திய 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இலங்கைக் கடற்படையினரின் மனிதநேயமற்ற இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலுக்குச் சென்றனர். அவ்வாறு சென்ற முதல் நாளிலேயே ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கடந்த 19-ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் உள்நோக்கத்துடன் எல்லை தாண்டவில்லை; அவர்களின் படகு பழுதடைந்ததால் தான் காற்றில் அடித்துச் செல்லப்பட்டனர் என்பதை தெரிவித்தும் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யும்படி இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அவர்கள் தாயகம் திரும்புவதற்கு முன்பாகவே அடுத்து 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய தொடர் அத்துமீறலை அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகியது. தமிழகக் கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவு சென்றால் தான் மீன்கள் கிடைக்கும். அவ்வாறு மீன்கள் கிடைக்கும் பகுதிகள் அனைத்தும் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகள் ஆகும். அங்கு சென்று மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது. அதை மதிக்காமல் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்யும் கொடுமைக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்.

மீனவர் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை தீர்ப்பதற்காக இந்தியா - இலங்கை கூட்டுப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இருதரப்பு மீனவர் சிக்கலைத் தீர்க்க அந்தக்குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்தாலும் கூட, அவற்றை இலங்கை அரசு மதிக்காதது தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும். மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்குடன் இந்தியா - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி சாதகமான முடிவை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x