Published : 22 Jun 2023 03:53 AM
Last Updated : 22 Jun 2023 03:53 AM

500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடல் | எங்கு, எத்தனை கடைகள்... - தமிழக அரசு உத்தரவின் முழு விவரம்

சென்னை: சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று முதல் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. சிரமமின்றி கடைகள் மூடப்படுவதை மாவட்டஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய உயிரிழப்புகளை தொடர்ந்து, டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதற்கிடையே, ‘‘தமிழகத்தில் 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்படும் நிலையில் அதில் தகுதியான 500 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும்’’ என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தசெந்தில் பாலாஜி அறிவித்தார்.

இதற்கான நடவடிக்கையை டாஸ்மாக் நிறுவனம் கடந்த மாதம் தொடங்கியது. பகுதி கண்காணிப்பாளர்கள், மண்டல மேலாளர்கள் மூலம் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, மூடப்பட வேண்டிய கடைகள் பட்டியலிடப்பட்டன.

பின்னர், அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, கடைகளை மூடுவதற்கான உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: முதல்வர் உத்தரவின்படி, 500 மதுக்கடைகள் கண்டறியப்பட்டு, மூடப்படும் என்று சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் அறிவித்தார்.

உள்துறை சார்பில் இதற்கான அரசாணை கடந்த ஏப்.20-ம் தேதி வெளியிடப்பட்டது. அதை செயல்படுத்தும் விதமாக, தமிழகம் முழுவதும் உள்ள மதுபானசில்லறை விற்பனை கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து, அவற்றை ஜூன் 22-ம் தேதி (இன்று) முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கண்ட 500 கடைகளும் இனிமேல் செயல்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலாளர்களுக்கு உத்தரவு: கடைகளை மூடுவது குறித்து அனைத்து மாவட்ட டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர்களுக்கும் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் எஸ்.விசாகன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது: மண்டல மேலாளர்கள் பரிந்துரைப்படி, குறைந்த வருவாய் உள்ளவை, குறைந்த இடைவெளியில் அருகருகே உள்ளவை, வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ளவை, நீதிமன்ற உத்தரவு உள்ளவை, நீண்ட நாளாக பொதுமக்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் கடைகள் என 500 கடைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கடைகள் ஜூன் 22-ம் தேதி (இன்று) முதல் மூடப்பட வேண்டும். இக்கடைகளில் பணியாற்றுபவர்களுக்கு மறுபணி குறித்த உத்தரவு விரைவில் வெளியிடப்படும்.

இந்த கடைகள் மூடப்படும் நிலையில், அங்குள்ள மதுபானங்களை மீண்டும் கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். கடைகளில் உள்ள அனைத்து மதுபான வகைகள் இருப்பு, திருப்பி அனுப்பும் அளவு உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட உதவி மேலாளர்கள் உறுதி செய்யவேண்டும். பழைய பில் இயந்திரங்கள், பாட்டில் கூலர்கள், விற்பனை முனைய இயந்திரங்கள் ஆகியவற்றை மாவட்ட மேலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதர கடைகளுக்கு இவை தேவைப்பட்டால் 7 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

வாடகை கட்டிடத்தில் இயங்கும் கடையாக இருந்தால், வாடகை பாக்கியை முன்பணத்தில் வரவு வைத்து, எஞ்சிய முன்பண தொகையை உரிமையாளர்களிடம் இருந்து விரைவாக பெற வேண்டும். சிரமமின்றி கடைகள் மூடப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேரம் குறித்து மறுபரிசீலனை: அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. ‘500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். மதுக்கடைகள் செயல்படும் நேரத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மூடப்படும் கடைகளில் பணியாற்றியவர்களுக்கு அருகே உள்ள கடைகளில் பணியாற்ற உத்தரவு வழங்கவேண்டும்’ என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் தனசேகரன் தெரிவித்துள்ளார்.

மூடப்படும் கடைகளின் பணியாளர்கள், விரைவில் அருகே உள்ள கடைகளில் காலி பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எங்கு, எத்தனை கடைகள்..: சென்னை வடக்கில் 20, சென்னை மத்தியில் 20, சென்னை தெற்கில் 21, காஞ்சிபுரம் வடக்கில் 15, காஞ்சிபுரம் தெற்கில் 16, திருவள்ளூர் கிழக்கில் 32, திருவள்ளூர் மேற்கில் 14 என சென்னை மண்டலத்தில் 138 கடைகள் மூடப்படுகின்றன.

கோயம்புத்தூர் மண்டலத்தில் கோவை வடக்கு, தெற்கு, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூரில் 78 கடைகள் மூடப்படுகின்றன. மதுரை மண்டலத்தில் மதுரை வடக்கு, தெற்கு, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனியில் 125 கடைகளும், சேலம் மண்டலத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணத்தில் 59 கடைகளும் மூடப்படுகின்றன.

திருச்சி மண்டலத்தில் திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 100 கடைகள் என தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 5,329 கடைகளில் 500 கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x