Published : 22 Jun 2023 01:08 PM
Last Updated : 22 Jun 2023 01:08 PM
தென்காசி: புதிய தமிழகம் கட்சி தொடங்கியதில் இருந்து தென்காசி மக்களவைத் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார்.
சில தேர்தல்களில் கூட்டணி அமைத்தும், சில தேர்தல்களில் கூட்டணி இல்லாமலும் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறார். இருப்பினும் கணிசமான வாக்குகளை தொடர்ந்து பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறஉள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தென்காசி மக்களவைத் தொகுதியைக் குறி வைத்து புதிய தமிழகம் கட்சி தேர்தல் வேலைகளைச் செய்து வருகிறது. கடந்த மாதம் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும் புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவருமான ஷ்யாம் உரையாற்றினார். இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் ஷ்யாம் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் புதிய தமிழகம் கட்சி தேர்தல் அலுவலகத்தை கிருஷ்ணசாமி நேற்று திறந்துவைத்தார்.
தென்காசியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “தேர்தல் அலுவலகங்கள் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே பாலமாக இருக்கும். மக்கள் பிரச்சினைகளை அதிகாரிகளிடம் கொண்டுசெல்வோம். தேர்தலை மட்டும் மையமாக வைத்து நாங்கள் செயல்படவில்லை. 1998 முதல் தென்காசி தொகுதியில் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறோம்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மக்களுக்கு கூடுதலாக பணியாற்ற முடியும். கடந்த 4 ஆண்டுகளாக தென்காசி தொகுதியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. அனைத்து மக்களவை தொகுதிகளிலும் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகம் திறக்க உள்ளோம். இதன் மூலம் மக்கள் குறைகளை கேட்டறிவோம்” என்றார்.
தென்காசி தொகுதியில் போட்டி யிடுவீர்களா? என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க வில்லை. டாக் டர் கிருஷ்ண சாமியின் மகனும் தென்காசி தொகுதியில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருவதால் இந்த தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுவாரா? அல்லது அவரது மகன் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நிர்வாகிகளிடம் கேட்டபோது, “கூட்டணி என்றால் தென்காசி தொகுதி உட்பட 2 தொகுதிகள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி 6 முறை போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். எனவே, கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
2 தொகுதி கிடைத்தால் மற்றொரு தொகுதியில் ஷ்யாம் போட்டியிட வாய்ப்பு உள்ளது. கூட்டணி இல்லாவிட்டால் ஷ்யாம் ஒரு தொகுதியில் போட்டியிடுவார். தென்காசியில் யார் போட்டியிடுவார் என்பதை கட்சிதான் முடிவு செய்யும்” என்றனர். தென்காசி தொகுதியில் பாஜகவும் கவனம் செலுத்தி வருகிறது. பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இருந்தால் தென்காசி தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...