Last Updated : 03 Oct, 2017 10:16 AM

 

Published : 03 Oct 2017 10:16 AM
Last Updated : 03 Oct 2017 10:16 AM

நீரில் கரையும் உரங்களுக்கும் மானியம் வேண்டும்; மகசூல் அதிகரிக்கப் பயன்படும்: மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை

மகசூல் அதிகரிக்கப் பயன்படும் நீரில் கரையும் உரங்களுக்கு விவசாயிகளிடையே மவுசு அதிகரிப்பதால் சொட்டு நீர்ப் பாசனத்தைப் போல மானியம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

நுண்ணுயிர் பாசனத் திட்டத்தின் ஓர் அங்கமான சொட்டு நீர் பாசனம் மூலம் மகசூல் அதிகரிக்கிறது. தண்ணீர் பயன்பாடு குறைவு என்பதாலும் அரசு மானியம் கிடைப்பதாலும் இப்பாசன முறைக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

நெற் பயிரைத் தவிர அனைத்துப் பயிர்களுக்கும் சொட்டு நீர் பாசன வசதி செய்து தர முடியும். பயிருக்கு ஏற்ப சொட்டு நீர் பாசன வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நிறைய செலவாகிறது. தென்னையாக இருந்தால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், காய்கறிப் பயிர்களாக இருந்தால் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும் செலவாகும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் என்றாலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலவாகும்போது அதற்கேற்ப சொற்ப அளவு தொகையை விவசாயிகள் செலுத்தும் நிலை உள்ளது. எப்படியாயிலும் சிறு, குறு விவசாயிகளுக்கு 75 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதமும் மானியம் கிடைக்கிறது.

இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆண்டுதோறும் 60 முதல் 80 ஆயிரம் ஹெக்டேர் வரை சொட்டு நீர் பாசனத்துக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 1 லட்சத்து 25 ஆயிரம் ஹெக்டேருக்கு சொட்டு நீர் பாசன மானியம் வழங்கப்பட உள்ளது” என்றார்.

மகசூல் அதிகரிப்பதால் சொட்டு நீர்ப் பாசனத்தைப் போலவே சொட்டு நீர் பாசனத்தில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய நீரில் கரையும் உரங்களுக்கும் விவசாயிகளிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரி கூறியதாவது: வழக்கமாகப் பயன்படுத்தும் உரங்களை விட நீரில் கரையும் உரங்களின் விலை அதிகம். மானியம் இல்லாததால் விலை அதிகமாக இருக்கிறது.

ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கப்படுகிறது. வழக்கமாகப் பயன்படுத்தும் உரத்துக்கு மானியம் தருவதால் விலை குறைவாக இருக்கிறது. யூரியா ஒரு கிலோ ரூ.6, டிஏபி உரம் ரூ.28-க்கு விற்கப்படுகின்றன.

நீரில் கரையும் உரங்களில் சத்துகள் அதிகம். அதனால் குறைவான அளவு உரங்களைப் போட்டாலே போதும். 2009-ம் ஆண்டுமுதல் தமிழகத்தில் இந்த உரம் பயன்படுத்தப்படுகிறது. அப்போது ஆண்டுக்கு 450 டன் விற்பனையானது. இப்போது 40 ஆயிரம் டன் விற்பனையாகிறது. அடுத்த ஆண்டு 1 லட்சம் டன் விற்பனையாகும் என்று மதிப்பிடப்பட் டுள்ளது.

இந்த உரங்களை விற்கும் டீலர்கள் எண்ணிக்கை 16-ல் இருந்து 67 ஆக அதிகரித்துள்ளது. நீரில் கரையும் உரங்கள் 90 சதவீதம் சீனா, பிரேசில், சவுதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த உரங்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் மானியம் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x