Published : 04 Jul 2014 12:27 PM
Last Updated : 04 Jul 2014 12:27 PM

இளவரசன் நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்கவில்லை: திருமாவளவன் அறிவிப்பு

தருமபுரி நத்தம் கிராமத்தில், நடைபெறும் இளவரசன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தருமபுரியை அடுத்துள்ள நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவர சன். காதல் கலப்பு திருமண விவ காரத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி ரயில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்தார்.

இளவரசனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (4-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. நினைவு நாள் நிகழ்ச்சியில் வெளியூரைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அமைப்புகள் பங்கேற்றால் அசம்பாவிதம் ஏற்படலாம் என்பதால் மாவட்டம் முழுவதும் வருகிற 10ம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல் நத்தம் கிராமத்தில், இளவரசன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்: "நத்தத்தில் இளவரசன் நினைவஞ்சலியில் கலந்து கொள்ளப்போவதில்லை. உயர் நீதிமன்ற உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். அதனாலேயே இம்முடிவுக்கு வந்துள்ளோம்.

இருப்பினும், கிருஷ்ணகிரியில் இளவரசனுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்துகிறோம். உயர் நீதிமன்ற உத்தரவு ஜனநாயக விரோதமானது. இளவரசன் நினைவஞ்சலியில், அரசியல் அமைப்புகள் பங்கேற்கக் கூடாது என கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. நத்தம் கிராமத்தில் நடந்த கலவரம் தொடர்பாக அப்பாவிகள் 7 பேரை கைது செய்து இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்" என்றார்.

திமுகவுடனான உறவு குறித்த கேள்விக்கு: திமுகவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. கூட்டணியில் தொடர்கிறோம். எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டால் வெற்றிவாய்ப்பு குறித்து ஆராய செப்டம்பர் மாதம் முதல் மாநிலம் முழுவதும் களப்பணி மேற்கொண்டு கருத்து கேட்டறியவுள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x