Published : 21 Jun 2023 05:20 PM
Last Updated : 21 Jun 2023 05:20 PM
சென்னை: "தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில்தான் கூட்டணி. அதிமுகதான் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்கும்" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்பட்டுத்த தவறியதாக தமிழக அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அங்கு கூடியிருந்த மக்களிடத்தில் ஜெயக்குமார் பேசியது: "மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிய நல்ல விஷயங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் பேசும்போது, திமுக ஊழல் கட்சி. அந்த ஊழல் கட்சி மீது மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார். அது ஒரு நல்ல விஷயம். எனவே, சீக்கிரமாக அந்த நடவடிக்கையை எடுங்கள். எல்லோரையும் சிறையில் அடையுங்கள். அதைத்தான் இன்று தமிழகமே எதிர்பார்க்கிறது. அப்போதுதான், தீபாவளி கொண்டாடியதுப் போல மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை.
ஆனால், அதேநேரத்தில் நீங்கள் ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும். இங்கே தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி, இபிஎஸ் தலைமையில் மலரும். இதுதான் நடக்கும்.
பாஜக கட்சியை வளர்ப்பதற்காக அவர்கள் ஆயிரம் கருத்துகளைக் கூறுவார்கள். அதுகுறித்து நாம் கருத்து சொல்ல முடியாது. எங்களுடைய கருத்து என்பது தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில்தான் கூட்டணி. அதிமுகதான் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்கும். வேறு யாரும் எங்களுக்கு ஒதுக்க முடியாது. நாங்கள்தான் இடங்களை ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தில் இருக்கிறோம்" என்று அவர் பேசினார்.
முன்னதாக, தாம்பரத்தில் நேற்று நடைபெற்ற பாஜக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழகத்தில் ஒரே ஒருமுறை பாஜகவை ஆட்சியில் அமர்த்துங்கள். ஊழலற்ற ஆட்சியை தருகிறோம். பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT