Published : 21 Jun 2023 07:20 AM
Last Updated : 21 Jun 2023 07:20 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பல லட்சம் ஆடு, பசுக்கள் உள்ளன. இந் நிலையில், மத்திய அரசு திட்டத்தில் 1,500 கால்நடைகளை மட்டுமே காப்பீடு செய்ய அனுமதிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்புத் தொழில் உள்ளது. இதனால் பல லட்சம் ஆடுகள், பசுக்கள் வளர்க்கப்படுகின்றன. கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை காப்பீட்டுத் திட்டத்தில் கால்நடைகள் காப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர், ஆதி திராவிடர் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு 70 சதவீத மானியத்திலும், மற்றவர்களுக்கு 50 சதவீத மானியத்திலும் காப்பீடு செய்யப்படுகிறது. இதில் கறவை பசு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடுகளை காப்பீடு செய்யலாம். ஒரு அலகு என்பது ஒரு மாடு அல்லது 10 ஆடுகளை குறிக்கும்.
ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கால்நடைக்கு ரூ.148 பிரீமியத்தில் மானியம் போக மீதி செலுத்தினால் போதும். கால்நடைகள் இறந்தால் இழப்பீடு கிடைப்பதால், காப்பீடு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல லட்சம் கால்நடைகள் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் 1,500 கால்நடைகளை மட்டுமே காப்பீடு செய்வதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் வேணு கோபால் கூறியதாவது: நோய், இயற்கை சீற்றம் போன்றவற்றால் கால்நடைகள் இறப்பு ஏற்படுகிறது. சில ஆண்டுகளாகவே , அதிகளவில் கால்நடைகள் உயிரிழக்கின்றன. இதனால் காப்பீடு செய்ய விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அரசு சார்பில் மிக குறைந்த கால்நடைகளே காப்பீடு செய்யப்படுகிறது.
இதனால் பெரும்பாலான கால்நடைகளை காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர், என்றார். இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நாகநாதன் கூறுகையில், இந்தாண்டு 5,000 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்துவிடும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT