Last Updated : 21 Jun, 2023 04:16 PM

14  

Published : 21 Jun 2023 04:16 PM
Last Updated : 21 Jun 2023 04:16 PM

தேவாரம், திருவாசகம் பாடல்களால் மூளை அதிக கிரகிப்புத் தன்மை பெறும்: ஆளுநர் தமிழிசை கருத்து

புதுச்சேரி: தேவாரம், திருவாசகம் பாடல்களால் மூளை அதிக கிரகிப்புத்தன்மை பெறும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். குழந்தைகளுக்கு ஐந்து வயது முதல் யோகா கற்று தர பெற்றோர் சபதமேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய கப்பல் துறையின் கீழ் இயங்கும் கலங்கரை விளக்கங்கள் இயக்குனரகம் சார்பில் புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள், மீனவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆளுநர் தமிழிசை உலக யோகா தினத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மீன்வளத் துறை இயக்குனர் பாலாஜி, சென்னை கலங்கரை விளக்கங்கள் இயக்குனரகத்தின் இயக்குனர் கார்த்திக் செஞ்சுடர், துணைத் தலைமை இயக்குநர் வெங்கடராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் ஆளுநர் தமிழிசை பேசுகையில், "கலங்கரை விளக்கம் என்பது கடலில் தத்தளிப்போர், கப்பல்களுக்கு வழிகாட்ட உதவுவது. அதேபோல தத்தளிக்கும் நம் உடல் ஆரோக்கியமாக வாழ கலங்கரை விளக்கம் போல வழிகாட்டுவது யோகா நிகழ்ச்சி. வீட்டில் நாம் இருக்கும் இடத்தில் சிறிய யோகக் கலையை கற்றுக்கொள்ளலாம். தேவாரம், திருவாசகம் சுலோகங்களை அடிக்கடி சொல்லும் போது மூளை அதை கிரகிக்கிறது. தொடர்ந்து இறைவணக்கம் பாடுவோரிடமும், அதை பற்றி கவலைப்படாமல் இருப்போரையும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து இத்தாலியில் மருத்துவ ஆய்வு நடத்தினர். அதில் தேவாரம், திருவாசகம் பாடல்களால் மூளை அதிக கிரகிப்புத் தன்மை பெறுவதைக் கண்டறிந்துள்ளனர். அதேபோல் யோகாவால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

உடல்நலம், மனநலத்துக்கும் யோகாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல நோய்களை தீவிரப் படுத்தாமல் யோகா பதப்படுத்தும். பல பண்டிகைகளை கொண்டாடுவதுபோல உடல்நல, மனநல விழாவாக யோகா திருவிழாவும் கொண்டாடும் வாய்ப்பு உள்ளது. மருத்துவரீதியில் குழந்தைகளுக்கு 5 வயதில் இருந்து யோகா கற்றுத் தரலாம். குழந்தைகளின் வளர்ப்பில் திட்டமிடும் பெற்றோர் 5 வயதில் யோகாவையும் கற்றுத்தர வேண்டும் என்ற சபதத்தை ஏற்க வேண்டும். எந்த வயதுக்காரர்களாக இருந்தாலும் யோகா கற்றுக் கொள்ளலாம். 2 மாநில கவர்னராக இருந்தாலும் எனக்கு யோகா செய்ய ஒரு மணி நேரம் கிடைக்கிறது.

எனவே, மாணவர்களும் நேரம் ஒதுக்கி யோகா செய்ய வேண்டும். எவ்வளவு சவால்களாக இருந்தாலும் யோகா நம் மனதையும், உடலையும் பலப்படுத்தி காப்பாற்றும். ஜூன் 21 தான் ஓர் ஆண்டில் அதிக அளவு பகலை கொண்டுள்ள நாள். அதனால்தான் யோகா தினம் அன்று கொண்டாடப்படுகிறது. யோகக் கலையோடு இறை உணர்வும் கலந்துள்ளது. மாணவர்கள் கட்டாயம் யோகா செய்ய வேண்டும். யோகாவில் ஈடுபட்டால் மனதை ஒருநிலைப்படுத்தி மனப்பாடம் செய்து படிக்க முடியும். பாடங்களில் தேர்ச்சி பெற முடியும். யோகா வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய அனைத்து சந்தர்ப்பங்களையும் வழங்கும்" என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து ஆளுநர் தமிழிசை கூறுகையில், "பள்ளிகளில் யோகா செய்ய வேண்டும் என சட்டமாக்கா விட்டாலும், அறிவுறுத்தப் பட்டுள்ளனர். யோகா, தற்காப்புக் கலைக்கு முக்கியத்துவம் அளிக்க கல்வித்துறையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போதைய காலத்துக்கு ஏற்ப கலைகள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x