Published : 21 Jun 2023 01:30 PM
Last Updated : 21 Jun 2023 01:30 PM

ஒரே ஆணையில் 560 வட்டார வள அலுவலர்களை பணி நீக்கம் செய்வதா? - ராமதாஸ் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டில் மாவட்ட வள அலுவலர்கள், வட்டார வள அலுவலர்கள் என 560 பேர் ஒரே அரசாணை மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை தணிக்கை செய்வதற்காக கடந்த 2014-15ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்ட மாவட்ட வள அலுவலர்கள், வட்டார வள அலுவலர்கள் என 560 பேர் ஒரே அரசாணை மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்றாக புதிய மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து ஆணை பிறப்பித்திருக்கிறது. 9 ஆண்டுகளாக மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றியவர்களை நீக்கி விட்டு, புதியவர்களை அமர்த்துவது அப்பட்டமான சமூக அநீதி ஆகும்.

மாவட்ட வள அலுவலர்கள், வட்டார வள அலுவர்கள் ஆகியோரை பணி நீக்கம் செய்ய எந்தவித நியாயமான காரணமும் இல்லை. வட்டார வள அலுவலர்களாக பணியாற்றி வரும் அவர்களுக்கு 6 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி மத்திய அரசிடமிருந்து நிதி வராததைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு 9 மாத ஊதியமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் வாழ்வாதாரம் இழந்த வட்டார வளப் பணியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் முறையிட்டு அந்த ஊதியத்தைப் பெற்றனர். அதனால், வட்டார வள அலுவலர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை உயரதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தான் பல்வேறு கட்ட பழிவாங்கல்களுக்குப் பிறகு பணி நீக்கத்தில் முடிந்திருக்கிறது. இது நியாயமற்றது.

மாவட்ட வள அலுவலர்களும், வட்டார வள அலுவலர்களும் முறையான கல்வித் தகுதிகளின் அடிப்படையில் போட்டித் தேர்வு நடத்தி, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றித் தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் ஐதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மூலம் பயிற்சியும் பெற்றனர். 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணி செய்தால் பணி நிலைப்பும், ஓய்வூதியமும் பெறத் தகுதியுடையவர்கள் அவர்கள். பணி நிலைப்பு செய்யப்பட வேண்டியவர்களை பணிநீக்கம் செய்வது எந்த வகையில் நியாயம்?

பயிற்சியும், 9 ஆண்டு பணி அனுபவமும் கொண்டவர்களை பணி நீக்கம் செய்து விட்டு, அவர்களுக்கு மாற்றாக புதிய வட்டார வள அலுவலர்களை அமர்த்தி, பயிற்சியளித்து தணிக்கைப் பணியில் ஈடுபடுத்துவது என்பது அறிவார்ந்த அணுகுமுறையாக இருக்காது. அதுமட்டுமின்றி, வழங்கப்படாத ஊதியத்தைக் கேட்டார்கள் என்பதற்காக வட்டார வள அலுவலர்களை பணி நீக்குவது நீதியல்ல.

எனவே, இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை எண் 17-ஐ ரத்து செய்து விட்டு, பணி நீக்கப்பட்ட மாவட்ட வள அலுவலர்கள், வட்டார வள அலுவலர்கள் 560 பேரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x