Published : 21 Jun 2023 03:38 AM
Last Updated : 21 Jun 2023 03:38 AM
ஆம்பூர்: ஆம்பூரில் ரூ.130 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மற்றும் உயர் மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகளை மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் நேற்று (20-ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை ரூ.130 கோடி செலவில் 6 வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை - பெங்களூரு இடையில் நகர பகுதிக்குள் தேசிய நெடுஞ்சாலை செல்லும் ஒரே நகரம் ஆம்பூர் நகரமாகும். இதனால் எப்போதும் ஆம்பூர் நகர பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதுமட்டுமின்றி ஆம்பூரில் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் நடந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன. ஆம்பூர் நகர பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காகவும் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆம்பூரில் 2.8 கி.மீ. தொலைவுக்கு 6 வழிச்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளும், 750 மீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால் ஆம்பூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணியையும், உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணியையும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகள் எந்த அளவில் உள்ளது?, மேம்பாலம் பணிகள், சாலை விரிவாக்கப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா?, இப்பணிகள் எப்போது முடியும் என்பது உள்ளிட்ட தகவல்களை அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் வெங்கடேசன், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் வாசுதேவன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT