Last Updated : 21 Jun, 2023 04:38 AM

1  

Published : 21 Jun 2023 04:38 AM
Last Updated : 21 Jun 2023 04:38 AM

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? - சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் பெயர்கள் பரிசீலனை

ஏ.கே.விஸ்வநாதன், சங்கர் ஜிவால்

சென்னை: தமிழகத்தின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான தேர்வு நாளை டெல்லியில் நடைபெறுகிறது.

தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபி சி.சைலேந்திரபாபு வரும் 30-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். ஏற்கெனவே, ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு பெற்று தற்போது அவர் பணி நிறைவு செய்கிறார். இதையடுத்து புதிதாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆயத்த பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதிய டிஜிபிக்கான பட்டியலை தேர்வு செய்வற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை(22-ம் தேதி) டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலர் அமுதா, தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபிக்கான போட்டியில் சஞ்சய் அரோரா (டெல்லி காவல் ஆணையர்), பி.கே.ரவி, சங்கர் ஜிவால் (சென்னை காவல் ஆணையர்), ஏ.கே.விஸ்வநாதன் (முன்னாள் சென்னை காவல் ஆணையர்), ஆபாஷ் குமார் (தீயணைப்பு துறை இயக்குநர்), சீமா அகர்வால் (தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர்) உள்பட 10 பேர் உள்ளனர். நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இறுதி செய்யப்படுகின்றனர்.

இதுகுறித்து டிஜிபி அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போதைய நிலையில் சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்படலாம். இந்த 3 பேரில் ஒருவரை தமிழகஅரசு தேர்வு செய்யும். தற்போதைய நிலவரப்படி முதல் இரண்டு இடங்களில் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் உள்ளனர். 30-ம் தேதி சைலேந்திரபாபுவுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெறும். 29-ம் தேதி பக்ரீத் பண்டிகையால் அரசு விடுமுறை. எனவே, 28-ம் தேதி, தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியின் பெயர் வெளியிடப்பட உள்ளது’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x