Published : 21 Jun 2023 04:04 AM
Last Updated : 21 Jun 2023 04:04 AM

தமிழகத்தில் பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால் ஊழல் செய்த அனைவரும் சிறையில் இருப்பார்கள் - ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

தாம்பரத்தில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

தாம்பரம்: ‘‘தமிழகத்தில் ஒரே ஒருமுறை பாஜகவை ஆட்சியில் அமர்த்துங்கள். ஊழலற்ற ஆட்சியை தருகிறோம். பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள்’’ என்று தாம்பரத்தில் நடந்த பாஜக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தாம்பரத்தில் நேற்று நடைபெற்ற பாஜக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது;- நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தமிழ் மொழிதான் தாய். தொன்மையான, அழகிய தமிழில் பேச எனக்கும் ஆசைதான். எனக்கு தமிழ் தெரியாததால், என் தாய்மொழியான இந்தியில் பேசுகிறேன். தமிழகத்தின் ராஜராஜ சோழனும், சேரர்களும் கடற்படையில் திறமையாக விளங்கினர். இது சித்தர்கள், ஆழ்வார்கள், திருவள்ளுவர் பிறந்த பூமி.

மக்களின் வளர்ச்சிக்காக கட்சி நடத்துகிறது பாஜக. பிற கட்சிகள் ஆட்சியை பிடிப்பதற்காக கட்சி நடத்துகின்றன. திமுகவின் ஊழல் ஆட்சியை நாடே அறிந்திருக்கிறது. தமிழகத்தில் ஒரே ஒருமுறை பாஜகவை ஆட்சியில் அமர்த்துங்கள். ஊழலற்ற ஆட்சியை தருகிறோம். பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள்.

செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். ஜனநாயகத்தை முடக்குவதாக பேசுகிறார், புலனாய்வு அமைப்புகளின் பணிகள் குறித்து கேள்வி எழுப்புகிறார். இதே செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது அவரை ஊழல்வாதி என்று கூறிய ஸ்டாலின், அவரை உடனே கைது செய்யவேண்டும் என்று பேசினார்.

அதிமுகவுடன் கூட்டணி: தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தர்மத்தின்படி, அதிமுகவுக்கு உரிய மரியாதை அளிக்க தயாராக உள்ளோம். முதல்முறையாக மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தவர் ஜெயலலிதா என்பதை பாஜகவினர் ஒருபோதும் மறக்க முடியாது. மறக்கவும் மாட்டோம். கூட்டணி கட்சிகளை மிகவும் மதிக்கிறோம். ஏனென்றால் இந்த கூட்டணி கட்டாயத்தால் அமைந்தது அல்ல, அர்ப்பணிப்பினால் உருவானது.

இலங்கையில் உள்ள தமிழர்கள் அமைதி, சமத்துவம், கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்ய பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. 2015-ல் பிரதமர் மோடி இலங்கை சென்றபோது, ​​யாழ்ப்பாணத்துக்கும் சென்றார். அங்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார். உள்நாட்டு போரால் வீடு இழந்த சுமார் 27,000 தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வீடு கட்டித் தந்துள்ளார்.

காங்கிஸ் ஆட்சியில் இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதற்கு கணக்கே இல்லை. ஆனால், மோடி பிரதமரானதும் இலங்கையுடன் ராஜாங்க நல்லுறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அண்ணாமலை தமிழகத்தின் தலைவர் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவின் தலைவராக வளர்ந்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக தனி விமானம் மூலம் சென்னை வந்த ராஜ்நாத் சிங், சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு வந்தார். 100-க்கும்மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x